செரிமானக் கோளாறுகளை நீக்கும் பார்லி!

பார்லி அரிசியை சமைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற கருத்து சரியா? அதைப் பற்றிய விவரம் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? அதற்கு வேறு ஏதேனும் மருத்துவப் பயன்கள் உள்ளதா?
செரிமானக் கோளாறுகளை நீக்கும் பார்லி!

பார்லி அரிசியை சமைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற கருத்து சரியா? அதைப் பற்றிய விவரம் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? அதற்கு வேறு ஏதேனும் மருத்துவப் பயன்கள் உள்ளதா?

-கணேசன், மதுரை.

பாவபிரகாசர் எனும் முனிவர், பார்லி அரிசியைப் பற்றிய வர்ணனையில் - துவர்ப்பும், இனிப்புச் சுவையும் நிறைந்த பார்லி அரிசி, வீர்யத்தில் குளிர்ச்சியானது என்கிறார். மேலும், உடல் உட்புற குழாய்களில் படிந்துள்ள படிவங்களை நன்கு உரசி, வெளியேற்றும் தன்மையுடையது, ஆனால் உண்பதற்கு மிகவும் மிருதுவானது என்கிறார். புண் ஆறுவதற்கு எள்ளைப் போல, பார்லி அரிசியும் பத்தியமானது. வறட்சி ஏற்படுத்தும், புத்திசக்தியை நன்கு தூண்டிவிட்டு, நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் கொண்டது, பசியினுடைய மந்த நிலையை மாற்றி பசியை நன்கு தூண்டிவிடும் சக்தி உடையது. சீரண இறுதியில் காரமான சுவையாக மாறும் தன்மையுடையது. உட்புறக் குழாய்களில் பிசுபிசுப்பை ஏற்படுத்தாது. நல்ல குரல்வளம் ஏற்படுத்தும், உடலுக்கு வலுவூட்டும், கனமான செரிமானப் பொருளாகும்.

அதிக அளவில் காற்றையும்  மலத்தையும் ஏற்படுத்தும்,  உடல்நிறம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும், சாப்பிடும் போது சற்று வழவழப்பாக இருக்கும். தொண்டையைச் சார்ந்த உபாதைகளையும், தோல் சார்ந்த உபாதைகளையும் குணப்படுத்தும், தலை, மார்புப் பகுதியில் ஏற்படும் சளித்தொல்லை, பித்தத்தினால் ஏற்படும் உடற்சூடு, கொழுப்பு ஆகியவற்றை நீக்கி ஆரோக்யத்தை நிலைநாட்டும். மூக்கிலிருந்து நீராக ஒழுகி கஷ்டப்படுபவர்கள், மூச்சிரைப்பு உபாதை உடையவர்கள், சளியினால் இருமல் ஏற்பட்டு துன்பப்படுபவர்கள், தொடை விரைப்பு, தண்ணீர் தாகம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்ற காலை உணவு பார்லி அரிசி தான்.

"தன்வந்தரி நிகண்டு' எனும் புத்தகத்தில் கூடுதலாக- பார்லி அரிசி நன்கு மலமிளக்கி குடலை சுத்தப்படுத்துமென்றும், ஆண்களுக்கு விந்தணு சக்தியை கூட்டுவதாகவும், சிறுநீரை தாராளமாக வெளியேற்றும் என்றும் காணப்படுகிறது.

"கையதேவ நிகண்டு' எனும் புத்தகத்தில்- முன் குறிப்பிட்ட அத்தனை குணங்களையும் கூறிய பிறகு, கூடுதலாக - உடல் பருமனை ஏற்படுத்தும் சதைக் கொழுப்பை சுரண்டி மேலும், கப - வாத - ரத்தத்தில் ஏற்படும் பூட்டுகளின் மந்தமான வீக்கத்துடன் வலி நிறைந்த உபாதையையும், சர்க்கரை உபாதையையும் குணமாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை சுஸ்ருதர் எனும் முனிவரும் அங்கீகரிக்கிறார்.

பார்லியினுடைய முழு அரிசியைக் கஞ்சியாக்கி அதன் தெளிவை காய்ச்சல், தொண்டைப்புண், சிறுநீர் எரிவு, நா வறட்சி போன்ற உபாதைகளுக்குப் பருகலாம். பால், பழரசம், மோர், உப்பு, சர்க்கரை இவற்றை  தேவைக்கேற்ப சேர்த்துக் கஞ்சி தயாரித்துக் கொடுக்க மலத்தை இளக்கி வெளியேற்றும்.  இதனை அரைத்து மாவாக்கியும் கஞ்சி செய்யலாம். உடல் வலுவூட்டும். தொடர்ந்து உணவாக்கிக் கொள்ள உடல் இளைக்கும். இதனை சாதமாக வடித்துச் சாப்பிடுவதில்லை.

குடல் அழற்சி அதாவது எரிச்சலால் துன்பப்படும் நபர்கள் , காலை உணவாக பார்லி கஞ்சியைச் சாப்பிடலாம். சிறுநீர்தடை ஏற்பட்டு அவதியுறும் உபாதையுள்ளவர்கள், பார்லி  கஞ்சியில் சிறிது ஏலக்காயை நுணுக்கிச் சேர்த்து காலையில் சாப்பிட நல்லது.  எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லையே என்று கஷ்டப்படுபவர்கள், பார்லி கஞ்சியை காலையில் சிறிது நாட்கள் தொடர்ந்து சாப்பிட, நல்லபலன் கிடைக்கும். செரிமானக் கோளாறு ஏற்பட்டு, சரி வர ஜீரணசக்தி இல்லாதவர்கள், பார்லியைக் கஞ்சியாக்கி, சிறிது சீரகம், ஓமம். கண்டந்திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றைச் சிறிய அளவில் பொடித்து சேர்த்து, காலையில் பருகிவருவதால் செரிமானக் கோளாறுகள் அனைத்தும் விரைவில் நீங்கிவிடும். யவை எனும் பெயரில் பார்லி விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை வடிவிலுள்ள யவை, சீமை யவை என்பர். குணத்தில் யவையை ஒத்து இருப்பதால்தான் பார்லி என்று பெயர். யவையையும் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். குடலில் வறட்சி ஏற்படுத்தும், ஆனால் மலத்தைக் கட்டாது. நீரிழிவு, கொழுப்பு அடைப்பு உள்ளவர்களுக்கு ஏற்றது. மார்புச்சளி, தலைச்சளி, சளியுடன் இழப்பு, தொடைச்சதை விரைப்பு, தொண்டை நோய் இவற்றிற்குப் பத்திய உணவுப் பொருள். யவையை சாதமாகவும், கஞ்சியாகவும், சத்து மாவாகவும் உபயோகிக்கத்தக்கது.   
(தொடரும்)

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com