ஒலியால் வரும் தலைவலி!

என் திருமணமாகாத 30 வயது மகனுக்கு பிறர் தண்ணீர் குடிக்கும் போது தொண்டையிலிருந்து வரும் ஒலி மற்றும் பிறர் சாப்பிடும் உணவை
ஒலியால் வரும் தலைவலி!

என் திருமணமாகாத 30 வயது மகனுக்கு பிறர் தண்ணீர் குடிக்கும் போது தொண்டையிலிருந்து வரும் ஒலி மற்றும் பிறர் சாப்பிடும் உணவை மெல்லும் ஒலி இவற்றினால், அவருக்கு அடுத்த விநாடியே பின் மண்டையில் ஒரு வலி ஏற்படுகிறது. அவருடைய உடல் எடை 94 கிலோ. இந்த பிரச்சனைக்கு ஆயுர்வேத மருத்துவம் ஏதேனும் உள்ளதா?

-நா. நிஷ்களானந்தன்,
கும்பகோணம்.

தலையை தன் முக்கிய இருப்பிடமாகக் கொண்டு செயல்படுகிற பிராண வாயுவின் கதி முடக்கத்தால் நீங்கள் குறிப்பிடும் உபாதை தலைதூக்கலாம். மனிதர்களுடைய உடலில் உணவுச்சத்தின் கதி முடங்கினால் உணவுச்சத்து வறண்டுபோகும், சிறு செயல்களைச் செய்வதிலும் பெரும் சிரமம், உட்புற சத்துகள் வறண்டு போதல், சோம்பல், சிறு ஒலியினுடைய சத்தமும் சகிக்க  முடியாத தன்மை போன்றவை ஏற்படும் என்கிறார் வாக்படர் எனும் முனிவர், தான் இயற்றிய அஷ்டாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூலில். மூளையினுடைய வலுவைக் கூட்ட வேண்டிய உணவுச் சத்து, அப்பகுதியில் குறைந்து போனால் பிராண வாயுவும் தன் செயல்களில் பலஹீனத்தை உணரத் தொடங்கும். உங்களுடைய மகனுக்கு, உண்ணும் உணவானது, பெருமளவில் அவை கொழுப்பினுடைய  உடல் பகுதியில் ஊட்டம் பெற்று, மற்ற பகுதிகளில் போதுமான அளவிற்கு ஊட்டம் கிடைக்காமலேயே போவதாகத் தோன்றுகிறது. கொழுப்பாக மாற்றும் நெருப்பானது கொழுந்துவிட்டு எரியும் நிலையில், மற்ற தாதுக்களின் நெருப்பானது மந்தமாகி, வரக்கூடிய  சத்தை உடலெங்கும் பரவவிடாமல் செய்துவிடுகிறது.

அதனால் உடல் பருமனைக் குறைக்க வேண்டும்.  அதற்கு அங்குள்ள நெருப்பை மட்டுப்படுத்த வேண்டும். மற்ற பகுதிகளிலுள்ள தாது பரிணாமம் எனும் தாது வளர்ச்சி தூண்டப்பட வேண்டும். மூளைக்குத் தேவையான ஊட்டத்தை ஏற்படுத்தி, அங்குள்ள நரம்பு மண்டலங்களைக் கோர்த்திருக்கும் அணுக்களின் வலுவைக் கூட்ட வேண்டும் என்ற பல பரிணாமங்களில் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

வரணாதி கஷாயம் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. சூடு ஆறிய தண்ணீர் கலந்து 5 மி.லி. தேனுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, உடல் பருமன் குறையலாம். தலைவலியைக் குறைக்கும், பசியைத் தூண்டும் இந்த மருந்தில், குளிர்ச்சியும் வறட்சியும் நிறைந்த தேன் சேர்ப்பதால், பசித்தீயை மட்டுப்படுத்தும். உட்புறக் குழாய்களைச் சுரண்டிச் சுத்தப்படுத்தும். அதனால் வாயுவிற்கு ஏற்பட்ட  தடை நீங்குவதால், அதன் சஞ்சாரமானது, தலையில் எளிதில் நடைபெறத் தொடங்கும். 

 ராஸ்னாதி சூரணத்தை இஞ்சி சாறு கலந்து சூடாக்கி நெற்றியில் பத்து போடுவதன் மூலமாகவும் தலை வலி நிவாரணம் பெறலாம். கார்ப்பாஸôஸ்தியாதி தைலத்தை மூக்கினுள் 2-4 சொட்டுகள் விட்டு உறிஞ்சித் துப்பிவிடவும். அது மூளை நரம்புகளை வலுவூட்டச் செய்யும். வாயினுள் அரிமேதஸ் தைலம் 5 மி.லி. அளவில் எடுத்து வாயினுள் விட்டு 5-10 நிமிடங்கள் கொப்பளித்துத் துப்பவும். மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தலைக்கு பலாஹடாதி தைலத்தை தேய்த்துக் குளிக்கலாம். 

 காது வாயு தோஷத்தினுடைய ஒரு முக்கிய இருப்பிடமாகக் கொண்டு சப்தத்தை உள்வாங்கி மூளைக்கு எடுத்துச் சென்று வந்துள்ள செய்தியை உணர்த்துவதால் காதினுள் விடப்படும் சில மூலிகைத் தைலங்களால், மூளை நரம்புகளை வலுவுறச் செய்து, தலைவலியை ஏற்படுத்தாமல் தடுக்க முடியும். அந்த வகையில், வசாலசுனாதி எனும்  தைலத்தை இளஞ்சூடாக காதில் நிரப்பும் சிகிச்சை முறையையும் ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

 கண்களில் மூலிகை நெய் மருந்தாகிய ஜீவந்த்யாதி க்ருதம் அல்லது த்ரைபல க்ருதம் உருக்கி, கண்களின் உள்ளே ஊற்றி நிரப்பிவைக்கும் தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை மூலமாகவும், மூளையிலுள்ள நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, தலைவலி உபாதையைத் தவிர்க்கலாம். இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

(தொடரும்)
பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com