மஞ்சள் தேய்த்தால் முகத்தில் அரிப்பு! ஆயுர்வேதத்தில் தீர்வு

கல்லூரியில் படித்து வரும் எனது மகளுக்கு வயது 21. அவளுக்கு முகம் மற்றும் உடலில் மஞ்சள் தேய்க்கப்பட்டால் உடல் முழுவதும் சிவப்பு அடைந்து,
மஞ்சள் தேய்த்தால் முகத்தில் அரிப்பு! ஆயுர்வேதத்தில் தீர்வு

கல்லூரியில் படித்து வரும் எனது மகளுக்கு வயது 21. அவளுக்கு முகம் மற்றும் உடலில் மஞ்சள் தேய்க்கப்பட்டால் உடல் முழுவதும் சிவப்பு அடைந்து, அரிப்பு எடுத்துவிடுகிறது. அதனால் மஞ்சள் முகத்திலோ, உடலிலோ தேய்ப்பதில்லை. இதற்கு ஏதாவது மருத்துவம் உள்ளதா? மேலும் தற்போது சிறிய பருக்கள் அடிக்கடி வருகின்றன. இதற்கு ஏதாவது ஆயுர்வேத மருத்துவம் உண்டா? 

-எம்.கண்ணன், ஐயர் பங்களா - மதுரை. 

பசுமையான மஞ்சள் கிழங்கைப் பாடம் படுத்த தற்போது சிக்கனத்தையும் செüகர்யத்தையும் முன்னிட்டு மஞ்சள் உற்பத்தியாளர்களும் மொத்த வியாபாரிகளும் நாக-காரீயச் சத்து கலந்த செயற்கை ரசாயனப் பொருள்களைச் சேர்க்கின்றனர். இவை விஷப் பொருள்கள். இவற்றால் பாடம் செய்யப்பட்ட மஞ்சளை அரைத்து பூசிக்கொள்ளும்போதும், உள்ளுக்குச் சாப்பிடும்போதும் நோய்கள் ஏற்படுவதில் விந்தையில்லை. நாக-காரீயச் சத்துள்ளவை பெரும்பாலும் தோல்நோயையும் வயிற்றுப் புண்ணையும் உண்டாக்குபவை. தற்போது குங்குமம் தயாரிக்கக் கடையில் வாங்கப்படும் மஞ்சளும் அந்தக் கலப்படப் பொருளே. அதனால் குங்குமமும் தோல்நோயை உண்டாக்குகின்றது. முன் காலத்தில் பசுமஞ்சளை சாணம்பூசி, குழியில் போட்டு மூடி, மேல் செத்தைகளைப் போட்டுப் பொசுக்கிப் புழுங்க வைப்பர். அவரவர்கள் வீட்டில் பசு மஞ்சளை சாணப் பாலில் வேகவைத்து அலம்பி உலர்த்திக்கொள்வதும் உண்டு. இவ்விரு முறைகளிலும் பாடம் செய்யப்பட்ட மஞ்சள், தோலைப் பாதுகாக்கும், புண்ணையும் ஆற்றும். இந்த மஞ்சளைக் கொண்டே தான் உணவுப்பொருள், பூச்சுப் பொருள், குங்குமம் முதலியவற்றைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். காரீய-நாகசத்து கலந்த மஞ்சளை உபயோகிக்கவே கூடாது. 

மஞ்சள் தேய்ப்பதால் தோலில் ஏற்படும் சிவப்பு சினப்புகள், அரிப்பு போன்றவை அகல, வெள்ளை மிளகையும், கார்போக அரிசியையும் தூள் செய்து கொண்டு, தேங்காய் பாலிலோ, தயிரின் மேல் நிற்கும் தண்ணீரிலோ, குழைத்துப் பூசலாம். கருஞ்சீரகத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். உள்ளுக்குத் திக்தகம் கிருதம், மஹாதிக்தகம் கிருதம் போன்ற நெய் மருந்துகளையும் சாப்பிடலாம். 21 வயதில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயற்கையே. இருந்தாலும் சிலருக்கு பருக்கள் பார்ப்பதற்குப் பெரிதாகவும் முக அழகைக் கெடுப்பதாகவும் தோன்றினால், குளிக்கும் முன் தோலுக்கு ஊட்டமளிக்கும் ஆலிவ் எண்ணெய், நால்பாமராதி தைலம், தூர்வாதி தைலம் ஆகியவற்றில் ஒன்றை, பஞ்சினால் முக்கி முகத்தில் தடவி, இதமாக முக தசைகளைப் பிடித்துவிட்டு, 15 - 20 நிமிடங்கள் ஊறிய பிறகு, கடலை, பயறு, அரிசி, இவற்றின் மாவு, வெந்தயத்தின் தூள், இவற்றைத் தனித்தனியே அரைத்து வைத்துக் கொண்டு, முகத்தில் பூசிய எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற, மாறி மாறி அரிசி வடித்த கஞ்சியுடன் குழப்பிப் பூசி, முகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இப்படி எண்ணெய் பிசுக்கு அகற்ற உபயோகப்படுத்தும் பொருள் உடலின் இயற்கை நெய்ப்பை அகற்றாமலிருக்கிறதா என்று கவனிப்பது அவசியம். 

முகத்தைத் துடைத்துக்கொள்ளும் துண்டு, கடுங்காரங்களாலான இன்றைய டிடர்ஜண்ட் தூள்களால் சுத்தம் செய்ய நேர்ந்தால், அதை நல்ல தண்ணீரில், அந்த மணம் - கலவை அகலும் வரை பல தடவை அலசி உலர்த்திய பிறகு பயன்படுத்தவும். முகத்தில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம், பருக்கள், வறட்சி, அரிப்பு நீங்கவும், மென்மை, மணம், வலிவு கூடவும், கஸ்தூரி மஞ்சள், பச்சிலை, கிளியூரம்பட்டை, ஜடாமாஞ்சி, பூலாங்கிழங்கு, பூஞ்சாந்துப்பட்டை, கோரைக்கிழங்கு, சோம்பு, அன்னாசிப்பூ, லவங்கப்பத்திரி, வெட்டிவேர், நன்னாரிவேர், சிறுநாகப்பூ, கார்போகரிசி, தாளீசபத்திரி, செண்பகமொட்டு, வெண்கோஷ்டம், கிராம்பு, கவுளா, மாகாளிக்கிழங்கு, லவங்கப்பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய், பாச்சோத்திப்பட்டை வகைக்கு 20 கிராம், மஞ்சிட்டி, மருக்கொழுந்து, மருவு, மகிழம்பூ, ரோஜா மொட்டு வகைக்கு 40 கிராம், விலாமிச்சை வேர், திரவியப்பட்டை, வெந்தயம், எலுமிச்சம்பழத்தோல் உலர்ந்தது, சந்தனத்தூள் வகைக்கு 80 கிராம், எல்லா சரக்குகளையும் ஒன்று சேர்த்து வெய்யிலில் உலர்த்தி இடித்து வஸ்திராயணம் செய்து, சூர்ணத்தை வாயகன்ற கண்ணாடி ஜாடியில் அமுக்கமாக மூடி வைக்கவும். 

உடல் உட்புற கழிவுகள் நிறைய சேரக்கூடிய இந்த இளம் பருவத்தில், அவற்றை அகற்ற, காலையில் குடித்த கஞ்சி செரிமானம் ஆன பிறகு, மதியம் திரிவிருத்லேஹ்யம் எனும் பேதி மருந்தை, சுமார் 20 - 25 கிராம் வரை சாப்பிட்டு குடலைச் சுத்தம் செய்வது நல்லது. இரு மாதங்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வது நலம்.

நன்னாரிவேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயத்தை காலை, மாலை என இருவேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமடையும். முகப்பருக்களும் வாடி, மறைந்துவிடும். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com