40. இனிய பயணத்திற்கு இனிய மருந்துகள்

காலகாலமாய் கால்நடையாகவே பயணம் செய்த மனிதன் விஞ்ஞான வளர்ச்சிகளின்
40. இனிய பயணத்திற்கு இனிய மருந்துகள்

காலகாலமாய் கால்நடையாகவே பயணம் செய்த மனிதன் விஞ்ஞான வளர்ச்சிகளின் விளைவாக வாகனங்களைக் கண்டுபிடித்தான். எவ்வளவு தூரமாயினும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் நடந்தே செல்வதும், தட்பவெப்ப மாற்றங்களாலும் விலங்குகளாலும், வழிப்பறித் திருடர்களாலும் பலவித இன்னல்களைச் சந்திப்பதும் நம் முன்னோர்கள் அடைந்த பலவகைப் பயணத் துயர்கள். இன்று நாடுவிட்டு நாடுசெல்ல சில மணி நேரம் போதும். உலகையே வலம்வர ஒருசில நாள்கள் போதும்.

விண்ணிலும் மனிதன் வலம் வரும் காலம் இது. எனினும் பயணங்களின் போது மனிதன் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றான். இத்தகைய பயண நோய்களால் பயணம் என்பது துயரமான, கடினமான, கசப்பான அனுபவமாக அமைந்துவிடுகிறது. இதனால் பயண நோயுள்ளவர்கள் பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கின்றனர் அல்லது முன் எச்சரிக்கையுடன் அல்லது பீதியுடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

பயணத்தின் போது ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை தடுக்க, குணப்படுத்த ஹோமியோபதி மருந்துகள் மிகவும் உதவுகின்றன. வருமுன் காப்பதே அறிவுடைமை. விடுமுறை காலத்தில் குடும்பத்தோடு, நண்பர்களோடு பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? எப்போது புறப்பட உள்ளீர்கள்? எத்தனை நாள்? எத்தனை நபர்கள்? என்பதற்கேற்ப முன் தயாரிப்புகளுடன் செல்வீர்கள். அத்துடன் ‘ஹோமியோ பயணநேர முதலுதவிப் பெட்டி’ (Homeo – Travel Kit) ஒன்றும் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பயணம் சிறந்த பயணமாய், இனிய பயணமாய், ஆரோக்கியமான பயணமாய் அமையும்.

பயண வாந்தியும் (Travel Sickness) ஹோமியோ மருந்துகளும்

கார், வேன், பஸ், ரயில், விமானம், படகு, கப்பல் போன்ற ஏதேனும் வாகனஙக்ளில் பயணம் செய்யும் போது குமட்டல், வாந்தி ஏற்படுவது Travel Sickness அல்லது Motion Sickness என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு பயணவாந்தி வருமானால் உடனடியாக பலவீனமும் சோர்வும், நகரக்கூட இயலாத நிலையும், யாருடனும்  பேச, யாரும் தொட விரும்பாத மனநிலையும், தனித்திருக்கவும் ஓய்வெடுக்கவும் விரும்புகிற மனநிலையும் ஏற்படுகின்றது. குழந்தையிடம் தோன்றும் அறிகுறிகளை நன்கு ஆய்வு செய்தும், குழந்தையின் உடல், மன அமைப்புக்கேற்ற (Constitutional Homeo) சிகிச்சை செய்தும் உள்ளார்ந்த அடிப்படை நோய்க்காரணத்தை அகற்றி நலம் அடையச் செய்யலாம்.

பயணம் துவங்கியதும் சிலருக்கு குமட்டல் ஆரம்பிக்கும், சிலருக்கு வாந்தி வந்துவிடும். சிலரால் வாகனத்துக்கு வெளியே ஓடும் காட்சிகளைப் பார்த்து ரசிக்க இயலாதவாறு குமட்டலும் தலைசுற்றலும் ஏற்பட்டுவிடும். அவரவர் பிரச்னைகளுக்கு ஏற்ற உடனடி நிவாரணம் தேவை. ஓரிருமுறை அடுத்தடுத்து வாந்தி எடுக்கும் போது நீர்வறட்சி (dehydration) ஏற்படும் ஆபத்து உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். வாந்தி நீடித்து, dehydration ஏற்படும் ஆபத்து உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். வாந்தி நீடித்து dehydration தீவிரம் அடையும் நிலையில் உடனடி மருத்துவமனை சிகிச்சை அவசியம்.

சிறிய பயணத்தின் (short trip) போது புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் ஒருவேளை (1 dose) ஹோமியோ மருந்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் பயணத்தின் இடையிடையே தேவைக்கேற்ப அரைமணி அல்லது ஒருமணி அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மருந்து உட்கொள்ளலாம்.

தொலைதூரப் பயணங்களில், சில நாள் அல்லது பலநாள் தொடர் பயணங்களில் புறப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பாகவே தினமும் 2 அல்லது 3 முறை ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். பின்னர் பயணத்தின் போதும் தேவைக்கேற்ப தினசரி சில வேளை மருந்துகள் தொடர்ந்து உட்கொள்ளலாம். இதன் மூலம் பயண வாந்தியைத் தடுக்கவும், நலப்படுத்தவும் முடியும். பயணத்தை இனிமையாக்கிக் கொள்ள இயலும்.

பயண வாந்திக்குப் பயன்படும் முக்கியமான ஹோமியோ மருந்துகள்

  1. காக்குலஸ் (Cocculus) – பயணநோய்க்குப் புகழ்பெற்ற முக்கிய மருந்து இது. பெரும்பாலோர் இம்மருந்தின் மூலம் நலம் அடைந்துள்ளனர் என்பதே இதன் சிறப்புக்கு ஆதாரம், பயணத்தின் போது குமட்டலும், வாந்தியும், மிகுந்த சோர்வும், படுத்துக் கொள்ளும் நிலைமையும் ஏற்படும். உணவுப் பொருட்களைப் பார்த்தாலோ அல்லது உணவுப் பொருட்களில் வாசனைப் பட்டாலோ குமட்டல் ஏற்பட்டுவிடும். வெளிப்புறம் நகரும் காட்சிகளை பார்த்தால் கூட குமட்டலும் மயக்க உணர்வும் அதிகரிக்கும். வயிற்றில் ஒன்றுமில்லாத உணர்வு உண்டாகும். சாலைப் பயணம் மட்டுமின்றி, கடல் பயணத்திலும் இம்மருந்து சிறப்பாக பயனளிக்கும்.
  2. பெட்ரோலியம் (Petroleum) – வயிற்றில் வெறுமை உணர்ச்சியுடன் நீடித்த நிலையான குமட்டல், எதுவும் சாப்பிட்டாலோ, உஷ்ணத்தினாலோ குமட்டல் அதிகரிக்கும். குமட்டலின் போது அதிக உமிழ்நீர் சுரக்கும். வயிற்றுவலி, கழுத்து பின் தலையில் பிடிப்பு வலி போன்ற குறிகளும் ஏற்படக்கூடும்.
  3. டபாகம் (Tabacum) : குமட்டல், மூர்ச்சை (Faint), முகம் வெளுத்தல், பனிக்கட்டி போல குளிர்தல், இரைப்பைக் குழியில் வெறுமையான மூழ்கும் உணர்ச்சி அதிகக் களைப்பு போன்ற குறிகள் ஏற்படும். இக்குறிகள் அனைத்தும் குளிர்ந்த வியர்வையுடன் மஞ்சள் நிர (அ) பசு மஞ்சள் நிற வாந்தியுடன்,தலையை சுற்றி இறூக்கிக் கட்டப்பட்ட உணர்வுள்ள தலைவலியுடன் காணப்படும். வாகனம் ஓட்டும் போது அசைவுகளில் குறிகள் அதிகரிக்கும். குளிர்ச்சியும், புத்தம்புதுக் காற்றும் உடலில் பட்டால், கண்களை மூடியே இருந்தாள் குறிகள் சற்று தணியும்.
  4. ரஸ்டாக்ஸ் (Rhustox) : வான்வழிப் பயணநோய்க்கு (Air sickness) ஏற்ற மருந்து, குமட்டல், வாந்தி உட்கார முயலும் போது கிறுகிறுப்பு போன்ற அறிகுறிகள் விமானப் பயணத்தின் போது ஏற்படும். மேலும்   வாய், தொண்டை வறட்சி, தணிக்க முடியாத தாகம், கடும் நெற்றித் தலைவலி, தலையைத் தொட்டாலே வலி (அதி உணர்ச்சி) போன்ற நிலையும் காணப்படும்.
  5. போராக்ஸ் (Borax) : கீழ்நோக்கி இறங்கும் போது பயம், நெஞ்சு கலக்கம் (fear of downward motion / landing of Airplane)
  6. காலி பைக்ரோமியம் (Kali bichromium) : கடல் பயண நோய்க்கு பயன்படக்கூடிய மருந்து, நின்றபடி பயணம் செய்தால் குமட்டல், மயக்கம் ஏற்பட்டு தீவிரப்படும். பயணம் காரணமாக சோர்வு, வலிகள் (குறிப்பாக முகம், தலைப்பகுதியில்) மஞ்சள் நிற வாந்தி ஏற்படும்.

குறிப்புகள்

  • பயண நாட்கலில் உடலில் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தினமும் ஓரிருவேளை Echinacea தாய் திரவத்தில் 10 சொட்டுகளை சிறிதளவு நீரில் கலந்து சாப்பிடலாம். மேலும் ஒவ்வொரு வேளை உணவிலும் சிறிது இஞ்சி சேர்த்துக் கொண்டால் ஜீரணம் சீராக அமையும்.
  • உணவோ, குடிநீரோ நச்சுத்தன்மை ஏற்பட்டிருந்தால் தாமதமின்றி ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum Album) மருந்தினை உட்கொண்டால் 90 சதவிகிதத்துக்கு மேலாக நலம் கிட்டுவது உறுதி.
  • உடலில் நீர்ச்சத்து வறட்சி ஏற்பட்ட நிலையில் நிறைய நீர் அருந்த வேண்டும். அல்லது தேன் கரைசலை சிறிது சிறிதாக அடிக்கடி அருந்தலாம். அல்லது உப்பு சர்க்கரைக் கரைசலை (ORS) அருந்தலாம்.

ஜெட் லாக் (Jet Lag)

ஜெட் லாக் என்பது கால வித்தியாசங்களுடன் தூரங்களை வானவெளியில் கடப்பதால் வரும் உபாதைகளைக் குறிக்கிறது. ஜெட் லாக் குறிகளான வழக்கமான தூக்க முறையில் இடையூறு, அதீத சோர்வு, எதிலும் கவனம் செலுத்த இயலாமை, ஜீரணத் தொந்தரவுகள் போன்ற உடல் நலப் பிரச்னைகளை ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்த இயலும்.

மனித மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் விழிப்பூட்டும் கடிகாரம் (Alarm clock) அமைந்து பல உடல் செயல்பாடுகளை இயக்கி வருகிறது. பசி, தாகம், உடல் உஷ்ணம், ரத்த அழுத்தம், தூக்கம், ரத்த சர்க்கரை, ஹார்மோன் அளவு போன்றவற்றைப் பேணுவதில் இயக்குவதில் ஹைப்போதாலமஸ் பங்கு முக்கியமானது.

கண்களிலுள்ள பார்வை நரம்புகள் மூலம் புற உலகில் நிகழும் இரவு மற்றும் பகல் குறித்த உணர்வு உள்வாங்கப்படுகிறது. இந்த உணர்வு ஹைப்போதாலமஸிலுள்ள நேரப்பராமரிப்பு மையத்துக்கு (Time keeping center) அனுப்பப்படுகிறது. தொலைதூரப்பயணத்தில் வெளிநாட்டுப் பயணத்தில் (shifting Time Zones) வழக்கத்திற்கு முன்பு அல்லது பின்பு விடியலை அல்லது இரவினை அறிவிக்க வேண்டிய நிலை ஹைப்போதாலமஸ்க்கு உண்டாகிறது. அதற்கேற்ப உடல் செயல்பாடுகள் தூண்டப்படும் நிலையும் உண்டாகிறது. இதனால் உடலில் தடுமாற்றம் நிகழ்கிறது. இதுவே (Jet Lag) எனப்படுகிறது.

ஜெட் லாக்கிற்குப் பயன்படும் முக்கியமான ஹோமியோ மருந்துகள் :

  1. ஆர்னிகா (Arnica) – ஜெட்லாக் ஏற்படுவதைத் தடுக்க அல்லது ஜெட்லாக்கிலிருந்து விரைவாக மீள உதவும் அற்புதமான ஹோமியோ மருந்து இது. பயணத்தின் முன்பும், பயணத்தின் பின்னரும் ஆர்னிகா 200 (அ) 1 m உட்கொள்வது சிறந்த பயனளிக்கும். இதனால் அதிக பயணக்களைப்பு, அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவற்றிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம்.
  2. அகோனைட் (Aconite) – பயம், பதற்றம், பீதி ஏற்படுமாயின் இம்மருந்து சிறந்த நிவாரணம் தரும்
  3. பெல்லிஸ்பெரன்னிஸ் (Bellis Perennis) – தூக்கத்தின் இடையில் விழித்துவிடுதல், பின்னர் தூக்கம் பாதிக்கப்படும்
  4. சாமோமில்லா (Charmomilla) – தீவிரமான, நீடித்த குமட்டல்
  5. லைகோபோடியம் (Lycopodium) – அடிவயறு முழுவதும் வாயு நிறைதல், அஜீரணம், ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம் (Anticipatory Fears)
  6. காக்குலஸ் (Cocculus) – தூக்க இழப்பினால் பலவித நோய்க்குறிகள் ஏற்படுதல்

Dr.S. வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் : 9443145700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com