குடிநோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள்

அறிவுக் குறைபாடுகள், பண்புக் குறைபாடுகள், புகை, மதுபோதை போன்ற தீயபழக்க
குடிநோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள்

அறிவுக் குறைபாடுகள், பண்புக் குறைபாடுகள், புகை, மதுபோதை போன்ற தீயபழக்க அடிமைத்தனங்கள் ஆகியவற்றிலிருந்து மனிதரை மீட்கும் மருத்துவ மற்றும் மனவியல் சிகிச்சைகளில் ஹோமியோபதி மருத்துவதற்குச் சிறப்பிடம் உண்டு. ஆழ்ந்த அனுபவமும், தேர்ந்த பயிற்சியும், மனிதாபிமானப் பண்புகளும் நிறைந்த ஹோமியோபதி மருத்துவர்களுக்கு போதையடிமைகளின் பாதையை மாற்றி அமைத்த அனுபவங்கள் இருந்தே தீரும்.

உளவியல் அடிப்படையில் போதை அடிமைகளை ஆய்வு செய்து, காரணமறிந்து சிகிச்சையளித்தல், நீண்ட கால குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தேவையற்ற தீய பண்புகளை அகற்றுதல், குடியினால் உருவான உடல்நலக் கேடுகளைத் தீர்க்க சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு தேவைக்கேற்ப சிகிச்சையளிக்கக் கூடிய வாய்ப்புகளும் ஹோமியோபதி என்ற ஒரே மருத்துவ முறையிலேயே அமைந்துள்ளன.

ஹோமியோ மருந்துகளை அளிக்கும் போது மூன்றுவகை மருந்துகள் போதை அடிமைகளுக்கு தேவைப்படுகின்றன.

  1. உடல்வாகுக்கேற்ற மருந்துகள் – Constitutional Remedies.
  2. உடனடிச் சிகிச்சைக்குரிய மருந்துகள் – Functionalo Remedies
  3. போதை நச்சுக்களை முறியடிப்பதற்கான நோயெதிர்ப்பாற்றலை தூண்டக் கூடிய மருந்துகள் – Remedies of Immunity

ஹோமியோபதி மருத்துவமுறையின் அடிப்படை விதிமுறைகளை பின்பற்றி உரிய மருந்துகளைத் தேர்வு செய்து சிகிச்சையளித்தால் உரிய பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு ஹோமியோபதி மருந்தையும் அம்மருந்திற்கான முக்கிய குறிகளை அறிந்து அறிகுறிகளோடு மதுபோதை அடிமையிடம் காணப்படும் குணம் குறிகளை ஒப்பிட்டுப் பார்த்து மருந்தளிக்க வேண்டும்.

பொதுவாக Quarcus, Angelica, Capsium, Apocynum போன்ற முக்கிய மருந்துகளில் மதுபோதை அடிமைகளின் மனக்குறிகள் மற்றும் உடற்குறிகள் பலவற்றைக் காணமுடிகின்றன. சில மாதகாலம் இம்மருந்துகளைப் பயன்படுத்தினால் மதுபோதைக் கேடுகளிலிருந்து விடுபடமுடியும். Quarcus என்ற மருந்தில் மது போதை விருப்பத்தைக் குறைக்கும் ஆற்றலும், அதன் தீய விளைவுகளிலிருந்து குணமளிக்கும் ஆற்றலும் காணப்படுகிறது. இம்மருந்து நாள்பட்ட மண்ணீரல் கோளாறுகளை நீக்குகிறது. மேலும் உப்புசம், ஜீரண உபாதைகள், தலைகனம், தலைசுற்றல், காதுகளில் சப்தம், உடல் உறுப்புகளில் வீக்கம் போன்ற குறிகளும் இம்மருந்தில் உள்ளன.

Capsium என்ற மருந்து மது, சாராயம் மீது வெறுப்பு உணர்வு ஏற்படுத்துகிறது. ஜீரண மந்தம், உப்புசம், லாகிரி வஸ்துகளில் தீவிர நாட்டம், வியர்த்தல், கடுமையான தாகம், தூக்கமின்மை, தற்கொலை எண்ணம், தனிமையிலேயே இருக்க விரும்பும் மனநிலை, வலிப்பு, உடல் பருமனடைதல், உடலுழைப்பு, உடற்பயிற்சி செய்வதில் வெறுப்பு போன்ற குறிகள் (நக்ஸ்வாமிகா மருந்துக்கு நெருக்கமான குறிகள்) இம்மருந்தில் காணப்படுகின்றன.

Constitutional Remedies எனப்படும் குடி போதை அடிமைகளின் மன, உடல்வாகுக்கேற்ற மருந்துகள் பயன்படுத்தும்போது மட்டும் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். உடல்வாகு மருந்துகளில் முக்கியமாகப் பயன்படக்கூடியவை சல்பர் (Sulphur), நக்ஸ்வாமிகா (Nuxvomica), லைகோபேடியம் (Lycopodium), பாஸ்பரஸ் (Phosphorus), லாச்சஸிஸ் (Lachesis), இக்னேஷியா (Ignatia).

‘சல்பர்’ மனிதர்கள் கந்தலாடைத் தத்துவஞானிகள், வீண் சொற்களால், வாதங்களால் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். காரியத்தில் ஒன்றுமில்லாமல் பேசிப்பேசியே காலம் கழிப்பவர்கள்.

திரவ உணவுகளை அதிகமாகவும், திட உணவைக் குறைவாகவும் உண்பவர்கள், அகமும், புறமும் சுத்தமில்லாதவர்கள் அழுக்கைப் பற்றியோ, ஆடையைப் பற்றியோ கவலையற்றவர்கள். அதிகமான மத ஈடுபாடு, மதம் பற்றிய பேச்சு இருக்கும்.

நக்ஸ்வாமிகா மனிதர்கள் சுய தூண்டுதலுக்காக டீ, காபி, பாக்கு, பீடி, சிகரெட், காரம் மசாலா நிறைந்த உணவுப்பொருட்கள் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். இத்தகைய விருப்பத்தின் விளைவால் மது, மாது என்று ஒரு கட்டத்தில் வது சேருவார்கள். நீண்ட நேரம் உட்கார்ந்து பலரும் அவரவர் பணிகளை முழுமையாக முடிப்படதற்கு தூண்டுதலாக (Stimulants) ஏதேனும் உட்கொள்பவர் எனில் அவர்கள் நக்ஸ்வாமிகா மருந்துக்கு உரியவர்கள்.

லைகோபோடியம் மனிதர்கள் நல்ல பசியோடு இருந்தாலும் சிறிது சாப்பிட்டதும் வயிறு நிறைந்துவிடும். கீழ் வயிறு உப்பிவிடும். மலச்சிக்கல் இருக்கும் அல்லது கடினமான சிறிதளவு மலம் கஷ்டப்பட்டுக் கழிக்க வேண்டியிருக்கும். தன்னம்பிக்கையில்லாதவர்கள் வாழ்க்கையை அவநம்பிக்கையோடு பார்ப்பார்கள். கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் காணப்படும்.

இவ்வாறு மது அடிமை மனிதர்களின் தோற்றம், நடத்தை, குணநலன்கள், நோய்குறிகளுக்கேற்ற ஹோமியோ மருந்தினை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தால் முழுநலம் கிட்டுகிறது.

உடல்நடுக்கம், வலிப்பு, தசை இழுப்பு, போதை ஜன்னி மற்றும் போதையால் ஏற்படும் மனக்குழப்பங்கள் (Delirium Tremens) ஆகிய பிரச்னைகளுக்கு பெல்லடோனா, அபிசிந்தியம், ஸ்டிரமோனியம், ஹையாசியாமஸ், அட்ரோபினம், ஜெல்சிமியம், அகாரிகஸ், சிமிசிபியூகா, ஸ்ட்ரைக்கினினம், பாஸ்பரஸ் போன்ற மருந்துகளும் மனம் மற்றும் நரம்பு சார்ந்த கோளாறுகளுக்கு அவீனா சடீவா, காலிபாஸ், காலி புரோமேட்டம், பாசிபுளோரா போன்ற மருந்துகளும் கல்லீரல் பாதிப்புகளுக்கு சைனா, லைகோபோடியம், செலிடோனியம், கார்டுஸ் போன்ற மருந்துகளும் பயன்படுகின்றன.

மூளையில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு அடைப்பு அல்லது மூளையிலுள்ள ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தக் கசிவுகள் காரணமாக ஒரு புறப் பக்கவாதம் மற்றும் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் (Apoplexy) ஏற்படலாம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ரத்தத்தில் யூரியா (நைட்ரஜன் கழிவு) அளவுஇக்கு அதிகமாக சேர்ந்து (Uraemia) வாந்தி, தலைவலி, விக்கல், கண் விரிவடைந்து பார்வை கருப்பாகத் தெரிதல் மற்றும் நினைவு தவறிய தூக்கம், மயக்கம் போன்றவை ஏற்படலாம். இத்தகைய சூழலில்  குப்ரம் ஆர்ஸ், குப்ரம் அசெடிகம், ஆர்சனிகம், லைகோபோடியம், பிக்ரிக் ஆசிட் போன்ற மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகளாய் பயன்படுகின்றன. Apoplexy என்ற மூளை ரத்த கசிவு பிரச்னையில் ஆர்னிகா, பெல்லடோனா, ஓபியம், பாஸ்பரஸ் குளோனாய்ன் போன்ற மருந்துகள் அற்புதப் பலனளிக்கக் கூடியவை.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Dr.Gallavardin தனது மருத்துவமனையில் நீண்ட காலம் ஏராளமான மது அடிமைகளுக்குச் சிகிச்சையளித்த அனுபவ அடிப்படையில் முக்கியமாகப் பயனளிக்கும் 14 ஹோமியோ மருந்துகளின் பட்டியலை முன் வைக்கிறார். 1. Nuxvomica. 2. Lachesis 3. Causticum 4. Sulphur 5. Calcarea Carb 6. Hepar Sulp 7. Arsenicum Album 8. Merc, Vivus 9. Petroleum, 10. Opium 11. Staphysagria 12. Conium 13. Pulsatilla 14. Magnesia-Carb இம்மருந்துகளை வாரம் ஒருமுறை வீதம் 2 வாரம் முதல் 7 வாரங்கள் வரை பயன்படுத்தி குடியினால் ஏற்பட்ட பலவித பாதிப்புகளையும், குடிக்கும் மனப்பான்மையையும் மாற்றியிருக்கிறார். இவை ஹோமியோபதியர்களின் கவனத்துக்குரியவை.

மதுபோதைப் பழக்கம் நம்மை அழிப்பதற்குமுன் அதனை அழிப்பதுதான் புத்திசாலித்தனம். ஏழைகள் வீட்டு இல்லாமை, அறியாமை, நோய்கள் போன்ற துயரங்கள் குடிப்பழக்கம் புகுந்துவிட்டால் மேலும் அதிகரித்து விடுகின்றன. குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து சீரழிகின்றன. வசதியானவர்கள் வீட்டில் குடிப்பழக்கம் புகுந்துவிட்டால் குடும்பமே நிலைகுலைந்து நிம்மதியிழந்து அன்பும் அன்னியோன்யமும் பறிபோய்விடுகிறது. வாழ்க்கை வாழ்வதற்கே! மது அடிமைகள் மாற்றுமுறை மருத்துவச் சிகிச்சைகளை நாடி வந்தால் வாழ்விலும் மாற்றம் பிறக்கும்.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

செல் – 9443145700

Email – alltmed@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com