21. கழுத்து பிடிப்பு பற்றிய விளக்கங்கள் சந்தேகங்கள்

உங்களின் பார்வை நேர்க்கோட்டுத் திறனை உங்கள் கழுத்து இயக்கங்களே தீர்மானிகின்றன.
21. கழுத்து பிடிப்பு பற்றிய விளக்கங்கள் சந்தேகங்கள்

உங்களின் பார்வை நேர்க்கோட்டுத் திறனை உங்கள் கழுத்து இயக்கங்களே தீர்மானிகின்றன. கழுத்துப் பகுதியே நம் தலைப்பகுதியையும் உடம்பையும் இணைக்கும் முக்கியப்பகுதி. தொடர்ந்து இயங்கும் கழுத்துப்பகுதி சில நேரங்களில் தவறாகப் படுத்து உறங்கும் காரணத்தால் திடீரெனப் பிடித்து கொள்ளும். பாதிக்கப்பட்டவர் கழுத்தை எந்தப் பக்கமும் திருப்ப முடியாமல் கழுத்தை சாய்த்து வைத்த நிலையில் மருத்துவரிடம் செல்வார்கள்.

சுமார் 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இரண்டு நாட்கள் முன் கடுமையான கழுத்துப் பிடிப்போடு என்னை அணுகினார். அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வி - உங்கள் கழுத்தின் வலி பகுதியில் யாரேனும் நீவி விட்டார்களா? அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். பெரும்பாலும் நாம் கழுத்துப் பிடிப்பு, கால் பிடிப்பு, கை பிடிப்பு போன்ற வலிகளுக்கு நமக்கு தெரிந்த முதல் மருத்துவம் பக்கத்தில் இருக்கும் எண்ணெய் அல்லது ஆயன்மென்ட் கொண்டு அடிப்பட்ட இடத்தை மிக வேகமாக அழுத்தி நீவி விடுவோம். இது சரியா தவறா?

இதற்கான விளக்கம் இங்கே தரவே, கழுத்துப் பிடிப்பு பற்றிய இக்கட்டுரை. உடம்பில் சுமார் 600 மேற்பட்ட தசைப் பகுதிகள் இணைந்து தனது முக்கிய வேலையான உடல் இயக்கத்தை செய்து வருகிறது. சில நேரங்களில் ஏற்படும் கடுமையான இயக்கங்கள் அல்லது தவறான நிலையில் இயக்கங்களினால், தசைப்பகுதி கடுமையான பாதிப்பு நேரிடுவதை தடுக்க, தசை தனது இயக்கத்தை கட்டுப்படுத்த தனது இயல்பு நிலையான இறுக்க நிலைக்குச் சென்று விடுகிறது. இதனையே SPASM அல்லது CRAMP என்பார்கள். இதில் கழுத்துப் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு அரிதான ஒன்று என்றாலும் நம் வாழ்வில் ஒரு முறையேனும் கழுத்து பிடிப்பை அனுபவித்து இருப்போம். கழுத்தைச் சுற்றியுள்ள மெல்லிய தசைகள் மிகவும் சிறியது. அதற்கு மேல் பின்னப்பட்ட தசைகள் சிறிது அளவில் பெரியது என்றாலும் நமது கழுத்தை தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும் பணியை செய்து கொண்டு இருப்பதால் எப்பொழுதும் தொய்வான நிலையில் இருக்கும். இதன் விளைவே சலூனில் சலூன்காரார் கழுத்தை திருப்பி நெட்டி எடுக்கும் பொழுது சுகமாக இருப்பது போன்று இருக்கும். இங்கே ஒன்று கூறிக்கொள்ள விளைகிறேன், வெளியில் நீங்கள் இது தகுதியான அறிவில்லாத எவரிடமும் நெட்டி எடுப்பது கழுத்தை வேகமாக திருப்புவது போன்ற செயல்கள் பெரிய ஆபத்தை எந்நேரமும் விளைவிக்கலாம். முடிந்த அளவு சலூன்காரர் மருத்துவ வல்லுனராக இருந்தால் கூட உங்கள் கழுத்தை வேகமாக திருப்புவதை அனுமதிக்காதீர்கள். வலியின் தீவிரம் நீங்கள் நெட்டி எடுப்பதால் கண்டிப்பாக குறைய வாய்ப்பே இல்லை. அதற்கான காரணம் அறிந்து தேவையானவற்றை செய்தால் மட்டுமே கழுத்து வலி நீங்கும்.

கழுத்தை மிக வேகமாகத் திருப்பும் பொழுது கழுத்து எலும்புகள் வேகமாக உராயும் பொழுது எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் பின்னாட்களில் வரலாம். அதே போல் கழுத்தை கடந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் கிழிந்து போகவோ அல்லது அதில் அடைப்புகள் ஏற்படவோ அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கழுத்துப் பிடிப்புக்கு உடனே அருகில் உள்ள நாட்டுக்கட்டு போடுபவரை அணுகினால் அவர் நல்லெண்ணெய் கொண்டு அழுத்தி நீவி விடும் பொழுது முன் கூறியது போல ரத்தக் குழாய்களில் ஏற்படும் இறுக்கம், அழுத்தம் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தினால் கழுத்துப் பிடிப்பு நீங்கினாலும், வேறொரு வலி உங்களை ஆட்கொண்டு விடும். அதற்கெனவே தகுதி பெற்ற மருத்துவர்களை அணுகி கழுத்துப் பிடிப்புக்கு மருத்துவம் பெறலாம். வலி மாத்திரைகள் மேற்கூறியது போல பெரும்பாலும் கழுத்துப் பிடிப்பு உதவாது. அதற்கெனவே பிசியோதெரபி மருத்துவம் செய்து கொள்ள மக்களை வலியுறுத்துகிறோம். இல்லை வீட்டு மருத்துவமே போதும் என்றால் குளிர்ப்பதனப் பெட்டியை திறந்து சிறியதாக இருக்கும் ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் அல்லது பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு, கழுத்துப் பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள தசைகளின் மீது வைத்து லேசான அழுத்தத்துடன் ஒத்தடம் கொடுக்கலாம். மெள்ள தசை பிடிப்பு குறைவதை உணரலாம். இந்த மாதிரி வைத்தியங்கள் உங்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை என்றால் நீங்கள் மருத்துவரை அணுகி வலி நிவாரணம் பெறுவதுதான் நல்லது. இருப்பினும் நான் கூறிய ஐஸ் ஒத்தடம் கண்டிப்பான நல்ல தீர்வாக அமையும்.

தொடர்ந்து பேசுவோம் ஐஸ் ஒத்தடம் பற்றி....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com