த்ரிஷாவின் ஸ்லிம் சீக்ரெட்!

பதினேழு வருடங்களாக சளைக்காமல், அலுக்காமல் கோலிவுட்டை கலக்கி வரும்
த்ரிஷாவின் ஸ்லிம் சீக்ரெட்!

பதினேழு வருடங்களாக சளைக்காமல், அலுக்காமல் கோலிவுட்டை கலக்கி வரும் நட்சத்திரம். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட துடிப்பான தமிழ்ப் பெண். கல கல சுபாவம், பெரிய பேனர்கள், பெரிய இயக்குனர்கள், முன்னணி கதாநாயகர்கள் என்று எல்லாவித சவால்களை துணிச்சலாக ஏற்று, தன் திறமையை வெளிக்காட்டிவரும் முன்னணி நடிகை. எட்டு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதும் தெலுங்குப் படவுலகில் நந்தி விருதும் பெற்றவர். எல்லாவற்றையும் விட சினிமா துறையில் 1999-ம் வருடம் காலடி எடுத்து வைத்ததிலிருந்து இன்று வரை, ‘குச்சி குச்சி ராக்கம்மா’வாக இருக்கும் ‘த்ரிஷா’ தான் இன்றைய VIP நாயகி (எப்படி த்ரிஷா அப்படியே இருக்கீங்க?)

செனடாப் சாலையில் இருக்கும் த்ரிஷாவின் இல்லத்திற்குச் சென்ற போது, ‘ஷார்ட்ஸ்’, டீஷர்ட்-ல் டி.வி பார்த்துக் கொண்டு நல்ல ஜாலி மூடில் இருந்தார்.

இனி த்ரிஷாவும் நாமும்...

வெகு நாட்களாக இந்த ரிலாக்சேஷனுக்குத் தானே ஆசைப்பட்டீர்கள் த்ரிஷா?

ஆமாம். ‘சதுரங்க வேட்டை’ படப்பிடிப்பு நடந்துகிட்டிருக்கு. இன்னிக்கு எனக்கு ஓய்வு நாள். அதனால இஷ்டத்துக்கு டி.வி பாக்கறது, ஃபிரண்ட்ஸ்கூட அரட்டை அடிப்பது. எல்லாவற்றையும் விட எங்க பாட்டியின் கைமணத்தில் உருளைக்கிழங்கு ரோஸ்ட், பீன்ஸ் பொரியல், மோர்க்குழம்பு...நல்லா ஒரு வெட்டு வெட்டிட வேண்டியது தான்.

உருளைக் கிழங்கில் கார்போ ஹைடிரேட் அதிகம் என்று சொல்வார்களே! அவாய்ட் செய்வதில்லையா?

பாட்டி சமையலில் எதுவாக இருந்தாலும் எனக்கு தள்ளுபடியே கிடையாது. வீட்டில் இருக்கும் போதாவது எது தேவை எது தேவையில்லை என்று பார்த்து பார்த்து சாப்பிட முடியும். வெளியிடங்கள் என்றால் என்ன பண்ண முடியும்? அங்கெல்லாம் போகும் போது ‘சூஸி’யாக இருக்க முடியாதே! எது கிடைக்குதோ சாப்பிடுவேன். ஆனால் எங்கு போனாலும் கையில் தண்ணி பாட்டில் எடுத்துக்கிட்டுத்தான் போவேன். நான் நிறைய தண்ணி குடிப்பேன். உடம்பை சீராக வைச்சிருக்கிறது தண்ணி ரொம்ப முக்கியம். இல்லையா?

அது தான் உங்க ‘ஸ்லிம்னெஸ்’- இன் காரணமா?

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் எதையுமே அளவோடு சாப்பிடுவேன். காலையில் ஒரு தம்ளர் வெதுவெதுப்பான சுடுநீரில், அரை மூடி எலுமிச்ச பழத்தைப் பிழிந்து, லேசாக உப்பு போட்டுக் கொண்டு, வெறும் வயிறாக இருக்கும் போது குடிச்சிடுவேன். கறிகாய் நிறைய சாப்பிடுவேன். தினமும் நிச்சயம் ஜூஸ் நிறைய குடிப்பேன். மற்றபடி மனசை ஈஸியாகவும், சுத்தமாகவும் வச்சுப்பேன். எனக்கு சுத்தமான ஆகாரம், சுத்தமான உடை, சுத்தமான சுற்றுப்புறம் இவை ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ், உங்களின் புன்னகைக்காகவே மிஸ் இந்தியா அவார்டுகள் வாங்கியிருக்கிறீர்கள். உங்களின் மேனி பராமரிப்பு பற்றி சொல்லுங்களேன்...

எனக்கு சின்ன வயசிலிருந்தே ஸ்விம்மிங் ரொம்பப் பிடிக்கும். நிறைய ஸ்விம் பண்ணுவேன். ஆனா எங்கம்மாவுக்கு ஒரு மீனைப் போல நான் தண்ணியிலேயே கிடப்பது ரொம்ப பயத்தை கொடுத்துச்சு. எனக்கு ஏதாவது உடம்புக்கு வந்திடுமோன்னு பயந்து தொடர அனுமதிக்கலை. என்னோட கோச் கூட நேஷனல் சாம்பியனுக்கு ட்ரெயின் பண்ணுவதாக சொன்னாரு. ஆனா நான் ஒரே குழந்தையாப் போயிட்டேன். அதனால பெத்தவங்களுக்கு என்னமோ ஒரு பயம்.

சமீப காலமா நிறைய சவாலான விஷயங்களை எடுத்துப் பண்ணுவதாக கேள்விப்பட்டோமே? சரியா?

உண்மைதான். எனக்கு இயற்கையாகவே ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் என்பது ரத்தத்துல ஊறியிருக்குன்னு நினைக்கறேன். ஏனென்றால் ‘ஸ்கை டைவிங்’ ‘ஸ்கூபா டைவிங்’ (அண்டர் வாட்டர்) இதெல்லாம் பண்ணிகிட்டிருக்கேன். எனக்கு சாகசமா எதாவது சாதிச்சுகிட்டேயிருக்கணும்ங்கற எண்ணம் எப்பவுமே உண்டு. டைம் கிடைச்சா போதும்  ஜுட் விட்டுடுவேன்.

உங்க சாகச ஆர்வத்தை சினிமாவிலும் நுழைத்து விட்டீர்கள் போலிருக்கிறது?

நீங்க மனசில எதை வச்சிக்கிட்டு பேசறீங்கன்னு தெரியும். சமீபமா வந்த ‘நாயகி’, ’அரண்மனை 2’ ‘கொடி’ படத்தைத் தானே சொல்றீங்க?

பேய் படங்களிலும், அரசியல்வாதி மாதிரி நடிக்கிறதுக்கும், எனக்கே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்தது. டைரக்டர்கிட்ட நானே கேட்டேன். 'சார் என்னால இந்த மாதிரி பண்ண முடியுமா?'-ன்னு, 'உன்னால முடியாதது ஒண்ணுமே கிடையாது, தைரியமா நடி' அப்படின்னு சொல்லிட்டாங்க. ‘கொடி’ படத்த பத்தி அவசியம் சொல்லணுங்க. அந்த படத்துல அதுவும் கிராமத்திலேர்ந்து வந்த கட்சி
பொம்பளையாக நடிக்க அந்தப் பட டீம் நிறைய உதவி பண்ணினாங்க. முக்கியமாக தனுஷ், நிறையவே கத்துக் கொடுத்தாரு. ஏன்னா, நான் சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. கிராமத்து பேச்சு, பாடி லாங்குவேஜ் இதெல்லாம் சுத்தமா தெரியாது. அவருதான் கையை எப்படி வெச்சுக்கணும்? முக பாவம் எப்படி பண்ணனும் என்று சொல்லிக் கொடுத்தாரு. தனுஷ் நல்ல நடிகர் மட்டுமில்ல, நல்ல மனுஷர். இந்த மாதிரி படங்களைப் பொருத்தவரைக்கும் எனக்கு இது புதுசுதான், நடிக்க வந்த நாட்களில் இந்த மாதிரி காரெக்டர் செய்ய ஆரம்பிச்சா அதுக்குன்னே முத்திரை குத்திடுவாங்க. நடிப்பவங்களுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும். இந்த ரோலை இவங்களால பண்ண முடியும்ங்கற நம்பிக்கை டைரக்டருக்கும் வரணும். அப்பதான் நடிகையை அவர்கள் செலக்ட் செய்வாங்க. 

நீங்க 'வெரைட்டீஸ்’ பண்ணுகிறீர்கள். உடம்பை மட்டும் எப்படி ஒரே மாதிரி வைத்துக் கொள்ள முடிகிறது?

நான் எக்ஸர்ஸைஸ் என்று பெரியதாக எதுவும் பண்றதில்லை. ஏன்னா, தினமும் செய்ய நேரம் இருக்காது. காலையில சீக்கிரமா எழுந்து, ஸ்பாட்ல நடிச்சிட்டு, ராத்திரி வீடு திரும்பறதே ஒரு பெரிய எக்ஸர்சைஸ் தான். ‘லாங் ப்ரேக்’ கிடைக்கும் போது, நல்ல குருவாகப் பார்த்து யோகா செய்ய போய்விடுவேன். எனக்கு ஆன்மிகத்துல ஈடுபாடு அதிகம் உண்டு. அதனால மனசை ஒருநிலைப்படுத்தி தியானத்தில ஈடுபடுவேன். தியானம்கிறது எவ்வளவு ஒரு நல்ல விஷயம் தெரியுமா? நம்ப மனசை கட்டுப்பாடா வைச்சுக்க முடியும். கோப தாபங்கள் வராது. கெட்ட எண்ணங்கள் உண்டாகாது. இவை எல்லாமே மனசை லேசா வெச்சுக்கிறதுக்கு நல்ல காரணங்கள் தானே. மனசு நல்லா இருந்தா உடலுக்கு எந்த வியாதியும் வராது. சரிதானே?

உங்களுக்கு ப்ரெண்ட்ஸ் சர்க்கிள் பெரியது என்று கேள்விப்பட்டோம்?

ஆமா, எனக்கு இன்னும் என்னோட ஸ்கூல்ல படிச்சவங்கதான் அதிகமா ஃப்ரெண்டா இருக்காங்க. டைம் கிடைக்கும் போது, நான் அவங்க வீட்டுக்கெல்லாம் போய் உக்காந்து மணிக்கணக்கில் அரட்டை அடிப்பேன். ரெஸ்டாரண்ட் போவோம் இல்ல தியேட்டருக்குப் போய் சினிமா பார்ப்போம். அதே போல எனக்கு பெட்ஸ் (pets) நல்ல நண்பர்கள் தான். அவைகளை கொஞ்சுவதில் அலாதி இன்பம் இருக்கு. அவைகளோடு நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன்.

சிகை அலங்காரப் பிரியரா நீங்கள்?

அப்படி எல்லாம் இல்லை. பொதுவாக ஷுட்டிங் என்றால் ஹெவி மேக்கப் போட வேண்டியிருக்கும். ஆனால் மற்றபடி வீட்டிலிருக்கும் போது நான் மேக் அப் போடுவதில்லை. (த்ரிஷா மெய்யாலுமே பொய் சொல்லலீங்க சாதாரணமாகத் தான் இருந்தாங்க) வெளியிடங்களுக்குப் போக வேண்டியிருந்தா பேசிக்காக என்ன போடணுமோ அதோடுதான் போவேன். ஆனால் இந்தத் தலைமுடி இருக்கு பாருங்க. ஷுட்டிங் சமயத்தில கன்னாபின்னான்னு மாத்துனா, பழைய நிலைமைக்கு கொண்டு வரதே ரொம்ப சிரமமா இருக்குங்க. அதுவுமில்லாமல் முடியும் ரொம்ப கொட்டிடும் இல்ல. அதனால பார்லருக்குப் போயி தலைமுடியை மட்டும் கொஞ்சம் சரி பண்ணிகிட்டு மெயிண்டெய்ன் பண்ணுவேன். வேற என்னங்க. நம்முடைய உலகம் நம்ம கையில் தான். நம்மளையும் சந்தோஷா வைச்சுக்கிட்டு பிறரையும் சந்தோஷப்படுத்தினா தான் வாழ்க்கை நல்லபடியா இருக்கும். ஸ்மூத் செய்லிங் செய்யலாம்.

வாஸ்தவமான பேச்சு. கோலிவுட்டைப்  பொறுத்தவரை மார்க்கண்டேயினி த்ரிஷாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்டை அறிந்து கொண்டு ‘சதுரங்க வேட்டை’வெற்றி பெற வாழ்த்தி விட்டு விடைபெற்றோம்.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com