பெண்களே இதை எல்லாம் செய்யாதீர்கள்!

கையில் மொபைல் ஃபோன் இருந்தால் இடம், பொருள், ஏவல் என எதுவும் தெரியாத இளம் சமுதாயத்தினரை
பெண்களே இதை எல்லாம் செய்யாதீர்கள்!

கையில் மொபைல் ஃபோன் இருந்தால் இடம், பொருள், ஏவல் என எதுவும் தெரியாத இளம் சமுதாயத்தினரை என்ன சொல்வது?  அதுவும் பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் போது கூட செல்பேசியில் நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு தொற்று பிரச்னைகள், தோல் வியாதிகள், உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். ஏன் ஆண்களுக்கு இவை ஏற்படாதா என்று வாதம் புரிய வேண்டாம். அவர்களுக்கும் இது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சீர்கேடுதான். ஆனால் பெண்களின் உடல்வாகு தொற்றுக்கள் ஏற்பட எளிதாக வழிவகுக்கும் விதமாக இயற்கையில் இருப்பதால் சில விஷயங்களில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே பெண்களே கீழ் வரும் ஐந்து கழிப்பறைத் தவறுகளை செய்யாதிருங்கள்!

டாய்லெட்டில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது

மலம் வரத் தாமதமானால் அல்லது அந்த உணர்வு வருவதற்கு முன்னரே கழிப்பறைக்குள் சென்று, ஃபோனை பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளுங்கள். டிவிட்டர் அல்லது ஃபேஸ்புக்கை பார்க்க வேறு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், கழிப்பறையில் அது வேண்டாம். காரணம் கிருமித் தொற்றினால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் ஃபோனிலும் பாக்டீரியாக்கள் பரவி அதிலே தங்கிவிடக் கூடும். உங்கள் கையிலிருந்து ஃபோனுக்கு தாவக்கூடிய தொற்றுக் கிருமிகள் அனேகம் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சல்மோனிலா, (salmonella) ஈ கோலி (E. Coli) மற்றும் சி டிஃஒ (C Diff) போன்ற பாக்டீரியாக்கள் கழிப்பறைத் தொற்று மூலம் பரவக்கூடியவை.

மனரீதியாகவும் கழிப்பறையில் ஃபோனை பயன்படுத்துவது பாதிப்புக்களை ஏற்படுத்தும். 'டாய்லெட்டில் நீங்கள் அதைத் தவிர்த்து வேறு சில விஷயங்களைச் செய்து கொண்டிருந்தால் நாளாவட்டத்தில் மலம் கழிப்பது ஒரு கடினமாக செயலாக மாறிவிடும். மூலநோய் பிரச்னைகள் ஏற்படலாம். ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வரும். மலத்தை வெளியேற்ற சிரமப்பட்டீர்கள் என்றால் சிறிது தூரம் அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருங்கள். உங்கள் மலவாய்க்குடல் இளக்கம் ஏற்பட்டு மலம் வெளியேறுவதில் அதிக சிரமம் இருக்காது’ என்கிறார் டாக்டர் அனிஷ் சேத். இதற்கு மேலும் நீங்கள் இப்பிரச்னையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் உங்கள் உணவுப் பழக்கத்தை சரி செய்து கொள்ளுங்கள். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு 25 லிருந்து 30 கிராம் வரை நார்ச்சத்து உணவுகளைக் கட்டாயம் சாப்பிடுங்கள். மேலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிகமாக துடைப்பது

சிலர் டாய்லெட்டில் வைக்கப்பட்டிருக்கும் காகித துடைப்பான்களை (டிஷ்யூ பேப்பரை) அதிகமாகப் பயன்படுத்துவார்கள். எந்த அளவுக்கு என்றால் ஒரு ரோல் பேப்பரை ஒரே வேளையில் காலி செய்துவிடும் அளவுக்கு. அதிகமாகத் துடைப்பது (Over Wiping) உடம்புக்கு ஆகாது என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் ஆசனவாயைச் சுற்றியுள்ள சதைப்பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு சிராய்ப்புக்கள் ஏற்படலாம். அது வீக்கமாக மாறி அரிப்பு ஏற்படும் என்கிறார் அனிஷ் சேத். ஒன்று அல்லது இரண்டு தடவை துடைத்தால் போதும் என்றும் அறிவுறுத்துகிறார்.

'உங்களுக்கு அதிகப்படியான டிஷ்யூ பேப்பர் தேவைப்படுகிறது எனில் உணவு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடவில்லை என்றாலோ தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றாலோ இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். இரண்டு டிஷ்யூவுக்கு மேல் தேவைப்படும் என்று தோன்றினால் ஈரப்பதமான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தலாம். அல்லது நறுமணமூட்டப்படாத பேபி வைப்ஸ் பயன்படுத்தலாம். வெட் டிஷ்யூவைப் பயன்படுத்தினால் உராய்வு அதிகமாக இருக்காது, தோல் எரிச்சல் அதிகளவு இருக்காது’ என்றார் சேத்.

 காற்று உலர்ப்பானை (Air Dryer) பயன்படுத்துதல்

கைகளை கழுவியபின் ஏர் ட்ரையரைப் பயன்படுத்துவதை விட காகித துவாலையைp (Paper Towel) பயன்படுத்துவதே மேலானது என்கிறார்கள் ஆய்வாளர்கள். காரணம் இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தும் போது அது கிருமிகளை காற்றில் மின்னல் வேகத்தில் பரப்பிவிடும். ஜெட் ஏர் ட்ரையர்கள் பயன்படுத்துவதால் சுற்றியுள்ள நுண்ணுயிர்கள் ஈர்க்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கு பேப்பர் டவல், அல்லது வார்ம் ஏர் ட்ரையர் பயன்படுத்துதல் நலம்.

தவறான திசையில் துடைப்பது

'சிறுநீர் அல்லது மலம் கழித்தபின்னர் அப்பகுதியை சுத்தப்படுத்த பல பெண்கள் சரியான முறையைப் பின்பற்றுவதில்லை. இன்னும் பலர் தவறான திசையில் துடைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்கள். எப்போதும் முன் பக்கத்திலிருந்து பின் பக்கத்தில் துடைப்பது தான் சரி’ என்கிறார் வி இஸ் ஃபார் வெஜைனா என்ற புத்தகத்தை எழுதியுள்ள மகப்பேறு மருத்துவர் டாக்டர் அலைஸா ட்வெக். பின்னாலிருந்து முன் பக்கம் துடைத்தால் மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதைக்கு இழுத்துச் செல்லப்பட்டு தொற்றுப் பிரச்னைகள் ஏற்படும். பெண்களின் இப்பாதை குறுகியதாக இருப்பதால் பாக்டீரியா தொற்று எளிதில் சிறுநீர்ப்பைக்குச் சென்று சிறுநீர்த் தொற்று நோயினை (யூரினரி ட்ராக்ட் இன்ஃபெக்‌ஷன்) ஏற்படுத்தி விடும். எனவே கவனமாக இருப்பது நல்லது.

ரொம்ப சுத்தம் என்று நினைத்து...

சந்தைகளில் கிடைக்கும் சில பொருட்கள் நறுமணத்துடன் இருக்கும். ஆனால் அதை உடனே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறப்புறுப்பைச் சுத்தப்படுத்த வாசனை சோப்பு, ஸ்ப்ரே மற்றும் நறுமணத் துடைப்பான்களை அடிக்கடி பயன்படுத்த வேண்டாம். உடலுக்குத் தேவையான பி ஹெச் சமன்நிலை இதனால் பாதிக்கப்படும். பி ஹெச் சமன்நிலை  (pH Balance) பாதிக்கப்பட்டால் அரிப்பு, எரிச்சல் மற்றும் சிறு புண்கள் ஏற்படும் என்கிறார் டாக்டர் ட்வெக். குளிக்கும் போது சாதாரண சோப் அல்லது தண்ணீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது. சுத்தப்படுத்துகிறேன் என நினைத்து அதிகப்படியாக தேய்த்து பி ஹெச் சமன்நிலை குறைந்துவிட்டால் தொற்று அல்லது அரிப்பு ஏற்பட்டிருக்கும் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com