செம்மரக் கடத்தல் தாதா சங்கீதாவை ஆந்திர போலீஸார் கைது செய்யாதது ஏன்?

ஆந்திர வனப்பகுதிகளில் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் போலீஸாரும், வனத்துறையினரும்,
செம்மரக் கடத்தல் தாதா சங்கீதாவை ஆந்திர போலீஸார் கைது செய்யாதது ஏன்?

ஆந்திர வனப்பகுதிகளில் தமிழக தொழிலாளர்களை விரட்டி விரட்டி கைது செய்யும் போலீஸாரும், வனத்துறையினரும், செம்மரக் கடத்தல் தாதாவான சங்கீதா சாட்டர்ஜியை கைது செய்யாதது ஏன்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி. செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடி நடவடிக்கையான "ஆபரேஷன் ரெட்' மூலம் கைதானவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவரைப் பற்றிய விவரம் தெரிய வந்தது. விளம்பர மாடல், விமான பணிப் பெண் என பன்முகத் தன்மை கொண்டவர்,
சர்வதேச செம்மரக் கடத்தல் தாதாவான லட்சுமணின் இரண்டாவது மனைவியான இவர், தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் லட்சுமணன் இருமுறை கைது செய்யப்பட்டவுடன் செம்மரக் கடத்தல் தொழிலை சங்கீதா கவனித்து வந்தார்.
இவர் மீது சித்தூரில் உள்ள நான்கு காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தூர் போலீஸார் கடந்த மே மாதம் சங்கீதாவை கொல்கத்தாவில் கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது வங்கிக் கணக்குகளை முடக்கி, பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவரை டிரன்சிட் வாரண்ட் மூலம் சித்தூர் அழைத்து வர முயன்றனர். ஆனால் சங்கீதா கொல்கத்தா நீதிமன்றத்தில் இதற்கு தடையாணை பெற்றார்.
பின்னர் கொல்கத்தா நீதிமன்றமும், சித்தூர் நீதிமன்றமும் சங்கீதா சாட்டர்ஜி மீது கைது வாரண்ட் பிறப்பித்த பின்னரும் அவரை கைது செய்து சித்தூர் அழைத்து வர ஆந்திர போலீஸாரால் முடியவில்லை. சங்கீதா குறித்த தகவல்களை வெளியிடாமல் சித்தூர் போலீஸார் மௌனம் சாதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மரம் வெட்டும் கூலி வேலை செய்யும் தமிழக தொழிலாளர்களை சேஷாசல வனப்பகுதியில் விரட்டி விரட்டி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருகின்றனர். பணத்தாசை காட்டி, அவர்களை கடத்தலில் ஈடுபட செய்யும் ஆந்திர ஏஜெண்டுகள், இடைத்தரகர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அரசியல் பிரமுகர்களின் மேல் நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆர்வம் காட்டாதது ஏன் என ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக தொழிலாளர்களின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சங்கீதா கைதானால்...!
கடந்த 6 மாதங்களாக கிடப்பில் இருக்கும் செம்மரக் கடத்தல் தாதா சங்கீதாவின் வழக்கை விசாரிக்க ஆந்திர போலீஸாரால் முடியவில்லை.
சித்தூர் மாவட்டம், மதனபள்ளி கிளைச் சிறையில் கைதியாக இருக்கும் சங்கீதாவின் கணவர் லட்சுமணன் 2 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் ஜாமீனில் வெளி வர உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. லட்சுமணன், சங்கீதாவை சந்திக்கும்போது அவரை கைது செய்வதற்காக போலீஸார் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சங்கீதாவை கைது செய்யும்பட்சத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் பெயர்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com