சேலம் உருக்காலை தனியார்மய முயற்சிக்கு மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை காலையில் கேள்வி நேரம் தொடங்கிய சிறிது நேரத்தில் சேலம் உருக்காலை விவகாரத்தை திமுக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பினார்.
அவர் பேசுகையில், "இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) ஒரு சிறப்புப் பிரிவு ஆலையாக சேலம் உருக்காலை செயல்பட்டு வருகிறது. அகலமான துருப்பிடிக்காத எஃகு மற்றும் சுருள்களை விநியோகம் செய்வதில் இந்த ஆலை முன்னணியில் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தமட்டில் இந்த ஆலை விவகாரம் மிகவும் தீவிரமானதாகும். 1971-ஆம் ஆண்டில் எங்கள் கட்சியின் தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தி ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இந்த ஆலை எஃகு தொழிற்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது.
மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) பரிந்துரையின்படி சேலம் உருக்காலையில் பங்கு விலக்கலை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது. இது பிராந்தியத்தில் தொழில் மேம்பாடு மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். 2,500 நேரடி ஊழியர்கள் மற்றும் 5 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் மீது எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தும். மேலும், லாபம் ஈட்டும் உருக்காலையாக இது இருப்பதால் அரசின் நடவடிக்கையை கைவிட்டு, தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்றார்.
மார்க்சிஸ்ட்: இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசுகையில், "சேலம் உருக்காலை விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து சாதகமான அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தை ஏற்கெனவே நாங்கள் எழுப்பியுள்ளோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், தனியார்மய நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்' என்றார்.
அதிமுக: அவரைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் பேசுகையில், "சேலம் உருக்காலை விரைவில் மின்னணு ஏலமுறையில் விற்கப்படும் என மத்திய உருக்கு அமைச்சகம் இந்திய எஃகு ஆணையத்திற்கு தெரிவித்திருப்பதாக இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) இந்திய எஃகு ஆணையம் (செயில்) தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு அதிமுக சார்பில் கடும் ஆட்சேபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னர்கூட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீதப் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்த போது தமிழக முதல்வர் துணிச்சலாக செயல்பட்டு, அந்தப் பங்குகளை தமிழக அரசே வாங்க நடவடிக்கை எடுத்தார். ஆகவே, சேலம் உருக்காலையை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளக் கூடாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com