ரூபாய் நோட்டு விவகாரம்: அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை நாள் முழுவதும்
ரூபாய் நோட்டு விவகாரம்: அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. எனினும், ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை கூடியதும் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு விவகாரத்தை எழுப்ப முனைந்தார். எனினும், அதற்கு அனுமதி மறுத்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கேள்வி-நேரம் தொடங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு விரைந்து சென்று, ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் குறித்து 184-ஆவது விதியின்படி வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இந்தக் கோரிக்கையை ஏற்க சுமித்ரா மகாஜன் மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். வழக்கமாக எழுப்பும் ஆங்கிலம், ஹிந்தி மொழி கோஷங்களைத் தவிர மலையாளம் போன்ற பிராந்திய மொழிகளிலும் அவர்கள் கோஷங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.
கூச்சல்-குழப்பம் நீடித்ததையடுத்து, அதிருப்தியடைந்த அவைத் தலைவர், தங்கள் போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களை எச்சரித்தார். கூச்சல்-குழப்பத்துக்கு இடையே 5 கேள்விகள் எழுப்பப்படுவதற்கு அவைத் தலைவர் அனுமதியளித்தார். பின்னர் அமளி காரணமாக நண்பகல் வரை 20 நிமிடங்கள் வரையும், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் இவ்வாறு 16-ஆவது நாளாக இடையூறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில்....: இதனிடையே, மாநிலங்களவை வியாழக்கிழமை காலை கூடியதும் பிரச்னை தொடங்கியது. "உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தது முதல் கடந்த 30 நாள்களில் 115 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களின் இறப்புக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட வேண்டும்' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறினார்.
அவர் பேசி முடிப்பதற்குள் தகவல்-ஒலிபரப்புத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு குறுக்கிட்டு, "இது வீண் அரசியல். விவாதம் நடக்கட்டும். ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்பு வெளியான நவம்பர் 8 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்' என்றார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசுவதற்கு அவைத்தலைவர் அழைப்பு விடுத்தார். இதற்கு வெங்கய்ய நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து குலாம் நபி ஆஸாத் பேசுகையில், "அரசின் தவறான கொள்கைகளால் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் இறந்து விட்டனர். அவர்களுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட வேண்டும்' என்றார்.
அப்போது, விவாதம் மீண்டும் தொடங்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். அதன் பின் எதிர்க்கட்சித் தலைவர்களும் கோஷங்களை எழுப்பியதால் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை 15-ஆவது நாளாக அலுவல் ஏதுமின்றி முடங்கியது.
மக்களவைத் தலைவர் கண்டிப்பு
ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை முன்வைத்து மக்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கண்டித்தார். அவர் கூறியதாவது:
தனது கருத்தைக் கூறுமாறு அழைக்கப்படும் ஓர் எம்.பி.யைப் பேசவிடாமல் அமளியில் ஈடுபடுவது என்பது பொருத்தமற்றது. எம்.பி.க்கள் இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு நான் தள்ளப்படுவேன். சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையூறு ஏற்படுத்துவதை கடந்த இரு தினங்களாக நான் கவனித்து வருகிறேன். விவாதம் நடத்த விரும்பினால் விவாதியுங்கள். ஆனால், ஒட்டுமொத்த அவைக்கும் இடையூறு ஏற்படுத்தாதீர்கள் என்றார் அவர்.
முன்னதாக, ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து பேச வருமாறு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி. ஜிதேந்தர் ரெட்டி புதன்கிழமை அழைக்கப்பட்டபோது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு மறுநாள், எம்.பி.க்களுக்கு அவைத்தலைவரிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com