பயங்கரவாதிகள் தாக்குதல் அபாயம்: நாடு முழுவதும் உஷார்நிலை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியாவில் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம்
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பலூரா கிராமத்தில் இருந்து குதிரை வண்டி மூலம் வெளியேறும் கிராமத்தினர்.
ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பலூரா கிராமத்தில் இருந்து குதிரை வண்டி மூலம் வெளியேறும் கிராமத்தினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியாவில் பயங்கரவாதிகள் எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், நாடு முழுவதும் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து அங்கு செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவ வீரர்கள் புதன்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் ஏராளமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் பகுதிகளில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் படையினர் உஷார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இதைபோன்று, பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எச்சரிக்கை குறிப்பு அனுப்பப்பட்டது. அதில், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்களை நிறுத்தி, பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக, மெட்ரோ நகரங்கள் எனப்படும் பெருநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பாகிஸ்தானையொட்டி அமைந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
பிஎஸ்எஃப் தீவிர கண்காணிப்பு: இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள எல்லைக் காவல்படை (பிஎஸ்எஃப்) தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களையொட்டி இருக்கும் எல்லைப் பகுதிகளில் இருக்கும் கண்காணிப்புச் சாவடிகளில் கூடுதல் வீரர்களை பணியில் ஈடுபடுத்தும்படி பிஎஸ்எஃப்-புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஒடிஸா உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com