பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்: ராணுவத்துக்கு கேரளம், தில்லி பேரவையில் பாராட்டு

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த ஏழு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, இந்திய ராணுவத்துக்குப் பாராட்டு தெரிவித்து
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்: ராணுவத்துக்கு கேரளம், தில்லி பேரவையில் பாராட்டு

பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த ஏழு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, இந்திய ராணுவத்துக்குப் பாராட்டு தெரிவித்து கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கேரள சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும், முதல்வர் பினராயி விஜயன் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு சட்டப்பேரவை பாராட்டுத் தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். பதற்றமான சூழல் மேலும் மோசமடையாமல் தவிர்ப்பதற்காக, தூதரகம் மற்றும் சர்வதேச அரசியல் நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

தில்லி பேரவையில்...: தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தில் பிரதமர் மோடியின் பெயரையும் சேர்க்குமாறு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா கேட்டுக் கொண்டார்.

அப்போது, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், "பிரதமர், மத்திய அரசு, உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவப் படைகளின் தளபதிகள் ஆகியோரைப் பாராட்டுகிறோம் என்ற வரிகளும் தீர்மானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்' என்றார். முதல்வரால் முன்மொழியப்பட்ட இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்குத் தகுந்த பதிலடி'


பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தால் கொல்லப்பட்ட ராணுவ வீரர் ஹேம்ராஜின் மனைவி தர்மவதி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர், உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல் மூலம், பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை முன்னமே எடுத்திருந்தால், உரி தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது என்றார் தர்மவதி.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர், ஹேம்ராஜ் என்ற இந்திய ராணுவ வீரரைக் கொன்றதோடு, அவரது தலையையும் துண்டித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com