முடக்கப்பட்ட 32 லட்சம் வங்கி அட்டைகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு

முடக்கப்பட்ட 32 லட்சம் வங்கி அட்டைகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு

பல்வேறு பொதுத் துறை, தனியார் வங்கிகள் பல தங்களது வாடிக்கையாளர்களின் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பற்று அட்டைகளை (டெபிட் கார்டு) திரும்பப் பெறுவதாகவும், முடக்குவதாகவும் அறிவித்துள்ளன.

பல்வேறு பொதுத் துறை, தனியார் வங்கிகள் பல தங்களது வாடிக்கையாளர்களின் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட பற்று அட்டைகளை (டெபிட் கார்டு) திரும்பப் பெறுவதாகவும், முடக்குவதாகவும் அறிவித்துள்ளன.

லட்சக்கணக்கான பற்று அட்டைகளின் தகவல்கள் ரகசியமாக திருடப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இது தொடர்பான முழுவிவரத்தையும், வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் விளக்குமாறு வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாடிக்கையாளர்களுக்கு புதிய பற்று அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் ரகசிய எண்ணை (பின் நம்பர்) கட்டாயம் மாற்றிக் கொள்ளுமாறு பல வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து இணையவழி தகவல் சிதைப்பாளர்கள் (ஹேக்கர்ஸ்) மூலம் பற்று அட்டை தொடர்பான ரகசியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமாக, தனியார் வங்கியான யெஸ் பேங்க்குக்கு "ஏடிஎம் நெட்வொர்க்' சேவை அளிக்கும் ஹிட்டாச்சி நிறுவன கணினிகளில் இருந்துதான் இணையவழியில் பற்று அட்டைகள் தொடர்பான பல்வேறு ரகசியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.

பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 6 லட்சம் பற்று அட்டைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பரோடா வங்கி, ஐடிபிஐ, மத்திய வங்கி, ஆந்திர வங்கி ஆகியவையும் பற்று அட்டைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, யெஸ் பேங்க் ஆகியவை பற்று அட்டைகளின் ரகசிய எண்ணை மாற்றிக் கொள்ளுமாறு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏஎடிஎம்களை மட்டுமே பயன்படுத்துமாறு எச்எடிஎஃப்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான பற்று அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. 32 லட்சம் பற்று அட்டைகள் என்பது அதில் அரை சதவீதம் கூட இல்லை. எனினும், சிறிய தவறு நடந்தாலும் மக்களுக்கு வங்கிகள் மீதுள்ள நம்பிக்கை சரிந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தை வங்கிகள் தீவிரமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com