"தலாக்' விவாகரத்தை ஏற்க மறுத்த முஸ்லிம் பெண்

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் "தலாக்' முறை விவாகரத்தை ஏற்க மறுத்த முஸ்லிம் பெண் ஒருவர், நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற விரும்புவதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளது

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் "தலாக்' முறை விவாகரத்தை ஏற்க மறுத்த முஸ்லிம் பெண் ஒருவர், நீதிமன்றம் மூலம் விவாகரத்துப் பெற விரும்புவதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புணே அருகேயுள்ள பாரமதியைச் சேர்ந்த இளம்பெண் அர்ஷியா பாக்வன் (18). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகமது காசிம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே முகமது காசிமின் தாய் உள்ளிட்ட அவரது உறவினர்கள் அர்ஷியாவை பல்வேறு வகையில் துன்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அர்ஷியாவுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.
புகுந்த வீட்டில் கொடுமை உச்சமடைந்ததை அடுத்து அர்ஷியா அண்மையில் தனது தாய் வீடுக்கு வந்து விட்டார். இந்நிலையில், அவரது கணவரிடம் இருந்து சில நாள்களுக்கு முன்பு ஒரு கடிதம் வந்தது. அதில் மூன்று முறை "தலாக்' என்று எழுதி, அர்ஷியாவை விவாகரத்து செய்வதாக முகமது காஷிம் குறிப்பட்டிருந்தார். இது அர்ஷியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முஸ்லிம் சத்ய சோதக் மண்டல் என்ற அமைப்பு, செய்தியாளர்களை அர்ஷியா சந்திக்க வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தது. அப்போது அவர் கூறியதாவது:
திருமணமான 6 மாதங்களிலேயே எனது மாமியார் உள்ளிட்டோர் என்னைக் கொடுமைப்படுத்தத் தொடங்கினர். கர்ப்பிணி என்றும் பாராமல் என்னை துன்புறுத்தி வந்தனர். இதனால் அண்மையில் எனது 8 மாத குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்தேன். எனது கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றபோது அவர் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார்.
இந்நிலையில், அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 3 முறை தலாக் என்று எழுதி என்னை விவாகரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு தரப்பாக தலாக் கொடுப்பதை பெண்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, முஸ்லிம் மதச் சீர்திருத்த அமைப்பை நாடினேன். தலாக் விவகாரத்து முறையை ஏற்க நான் விரும்பவில்லை. நீதிமன்றம் மூலமே எனது கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெற விரும்புகிறேன் என்றார்.
தலாக் விவாகரத்து முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் கருத்துத் தெரிவித்தது. இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உள்ளிட்ட இஸ்ஸாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், முஸ்லிம் பெண் ஒருவர் தலாக் விவாகரத்து முறையை ஏற்க மறுத்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com