ஆந்திர- ஒடிஸா எல்லையில் 24 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி வனத்தில் இரு மாநில போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில்

ஆந்திரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் உள்ள மல்கான்கிரி வனத்தில் இரு மாநில போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டத்தில் உள்ள ராம்குர்ஹா வனப்பகுதியில் இரு மாநில நக்ஸல் தடுப்புப் படையினரும் இணைந்து தங்கள் வழக்கமான பணியான நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது நக்ஸல் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீஸாரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர்.
சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுள் 7 பேர் பெண் தீவிரவாதிகளாவர்.
துப்புக் கொடுத்தால் தலா ரூ. 20 லட்சம் சன்மானம் என்று காவல் துறையால் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்த நக்ஸல் இயக்கத்தைச் சேர்ந்த தந்தையும், மகனுமாகிய இரு முக்கியத் தலைவர்களும் இந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் நக்ஸல்களின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு காவலர்கள், விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரகத்தைச் சேர்ந்த 4 இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com