கட்சி மேடையில் முலாயம் - அகிலேஷ் நேரடி வாக்குவாதம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதிக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், முதல்வரான அவரது மகன் அகிலேஷ் யாதவும் கட்சி நிர்வாகிகள்
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் சமாஜவாதிக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றபோது, கட்சித் தலைமையகத்துக்கு வெளியே திரண்டிருந்த அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் சமாஜவாதிக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றபோது, கட்சித் தலைமையகத்துக்கு வெளியே திரண்டிருந்த அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதிக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், முதல்வரான அவரது மகன் அகிலேஷ் யாதவும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புதிய கட்சி தொடங்கப்போவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அகிலேஷ் யாதவ் மறுத்துள்ள போதிலும், முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கின் தம்பியும், அமைச்சருமான சிவபால் யாதவையும், அமர் சிங்கை ஆதரிக்கும் மேலும் 3 அமைச்சர்களையும், அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பதவிநீக்கம் செய்தார்.
அதற்குப் பதிலடியாக, அகிலேஷ் யாதவின் ஆதரவாளரும், மற்றொரு தம்பியுமானராம்கோபால் யாதவை முலாயம் சிங், கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் கூட்டம், லக்னெளவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முலாயம் சிங் பேசியதாவது:
அமர் சிங், சிவபால் யாதவ் ஆகியோருக்கு எதிராகக் கூறும் கருத்துகளை சகித்துக் கொள்ள மாட்டேன். அமர் சிங், எனக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறார். அவர் இல்லாவிட்டால், நான் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். அவர், எனது சகோதரரைப் போன்றவர்.
சில அமைச்சர்கள், முகத் துதிக்காகப் பேசுவார்கள். ஆனால், செயலில் ஏதும் இருக்காது. சிவபால் யாதவ், கட்சிக்கு ஆற்றிய பணிகளை என்னால் மறக்க முடியாது. அவர், மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர்.
நாம் தற்போது, இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளோம். நமது பலவீனங்களை அகற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
சமாஜவாதிக் கட்சியைக் கட்டமைப்பதற்காக, பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், கட்சியில் சமீப காலமாக நடக்கும் விஷயங்கள் வருத்தம் அடையச் செய்கின்றன.
விமர்சனத்தை சகிக்க முடியாதவர்களால், தலைவர்களாக உருவாக முடியாது. பெரிய அளவில் சிந்திக்காதவர்களாலும், தலைவர்களாக உருவாக முடியாது. ஒரு விமர்சனம் சரியானதாக இருந்தால், அங்கு வளர்ச்சிக்கான வழிகள் உள்ளன.
ஒரு அரசோ அல்லது ஒரு கட்சியோ, முழக்கங்களின் உதவியால் வெற்றி அடைந்துவிடாது. வெற்று முழக்கம் எழுப்புவோரை வெளியேற்றுவேன். சமாஜவாதிக் கட்சியில் ஒருபோதும் பிளவு ஏற்படாது. என்னை பலவீனப்படுத்தவும் முடியாது என்று முலாயம் சிங் பேசினார்.
அவர் தனது பேச்சுக்கு நடுவே, ""உனது திறமை என்ன? உன்னால் தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று அகிலேஷ் யாதவைப் பார்த்துக் கேட்டார்.
தொண்டர்கள் மோதல்: இதனிடையே, கட்சி அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களுக்கும், சிவபால் யாதவ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைந்துபோகச் செய்தனர்.

தனிக்கட்சி தொடங்க மாட்டேன்


அகிலேஷ் யாதவ் பேசுகையில், "புதிய கட்சியைத் தொடங்கும் திட்டம் எதுவும் எனக்கில்லை; முலாயம் சிங் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்கும் தயாராக இருக்கிறேன்' என்றார். கூட்டத்தில் பேசும்போது அவர் கண் கலங்கினார். அவர் மேலும் பேசியதாவது:
எனது தந்தையே எனது குரு. பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி, எனது குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்த பலர் முயன்று வருகின்றனர்.
இத்தனை ஆண்டு காலம், மக்களின் நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறேன். நான் ஏன் புதுக் கட்சித் தொடங்க வேண்டும்?
எனது தந்தை விரும்பினால், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.
"நேர்மையானவர்' எனக் கருதும் ஒருவரை, அவர் முதல்வராக நியமித்துக் கொள்ளட்டும் என்றார் அகிலேஷ் யாதவ்.
கட்சிக்குள் தற்போது நடக்கும் குழப்பங்களுக்கு அமர் சிங் தான் காரணம் என்றும் அகிலேஷ் யாதவ் புகார் கூறினார்.

சிவபால் யாதவ் மறுப்பு


சிவபால் யாதவ் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதியக் கட்சியைத் தொடங்கப்போவதாக அகிலேஷ் யாதவ் தன்னிடம் தெரிவித்திருந்ததாகக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
சமீபத்தில் முதல்வரைச் சந்தித்தபோது, புதிய கட்சியைத் தொடங்க இருப்பதாகக் கூறினார். சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இதை கங்கை நீரில் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறேன். எனவே, கட்சியை முலாயம் சிங் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். மேலும், அமர் சிங்குக்கு எதிராகப் பேசுபவர்கள், அவருடைய கால் தூசிக்குச் சமமாக மாட்டார்கள் என்றார்.
அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் சமாஜவாதிக் கட்சி ஆட்சியமைத்ததில் தனது பங்களிப்பு குறித்தும், தனது துறையில் ஆற்றிய பணிகள் குறித்தும் அவர் விளக்கமாகப் பேசினார். அழைக்காத நேரத்திலும், முதல்வரைச் சந்திப்பதை தாம் வழக்கமாகக் கொண்டிருந்ததாக சிவபால் யாதவ் கூறினார். அதைத் தொடர்ந்து, அகிலேஷ் யாதவுக்கும், சிவபால் யாதவுக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com