பாதுகாப்புப் படையினர் இனி இணைய வழியில் வாக்களிக்கலாம்!

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோர், இனி வரும் தேர்தல்களில் இணைய வழி தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் பணிபுரிவோர், இனி வரும் தேர்தல்களில் இணைய வழி தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தேர்தல் சமயங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே, தேர்தல்களில் அவர்கள் வாக்களிப்பது என்பது இயலாத காரியமாக இருந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, அவர்களுக்கென தபால் வாக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த முறையில் நேர விரயம், ரகசியம் வெளியாதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.
இதையடுத்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கு தேர்தல்களில் வாக்களிக்க சிறப்பான முறையை அறிமுகம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதற்காக, தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி அண்மையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப், தொழிலகப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட துணை ராணுவப் படையினர் தேர்தல்களில் இணைய வழி தபால் மூலம் வாக்களிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இதன்படி, பாதுகாப்புப் படையினர் இணையத்தில் தபால் வாக்குச் சீட்டை பதிவிறக்கம் செய்து அதில் தங்களது வாக்கினைப் பதிவு செய்து அவற்றை இணையம் மூலமாகவே தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இந்நிலையில், இந்த புதிய நடைமுறையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இதுதொடர்பாக 1961-ஆம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது.
எனவே, இனி வரும் தேர்தல்களில் பாதுகாப்புப் படையினர் இணைய வழியிலேயே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com