முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பாதுகாப்போம் : "தலாக்' விவகாரத்தில் மோடி திட்டவட்டம்

"தலாக்' விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி
உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல்  பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.
உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி.

"தலாக்' விவாகரத்து முறையால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று முறை "தலாக்' என்று கூறி இஸ்லாமிய சமூகத்தில் விவாகரத்து வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதைத் தவிர, ஹிந்து மதத்தில் பெண் சிசுக் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மஹோபா நகரில் பாஜகவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மோடி, பெண்ணுரிமையையும், "தலாக்' பிரச்னையையும் முன்னிறுத்திப் பேசினார். இந்த விவகாரத்தில் ஊடகங்கள் செயல்படும் விதத்தையும் அப்போது அவர் விமர்சித்தார். தொண்டர்களிடையே இதுதொடர்பாக மோடி மேலும் பேசியதாவது:
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகளை வேரறுக்காமல் எந்த ஒரு சமூகமும் வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முடியாது. தாய், மகள், சகோதரி என வெவ்வேறு உறவுமுறைகளில் நம்மைச் சுற்றி பெண்கள் வாழ்கின்றனர். அவர்களைப் பாதுகாப்பதும், மதிப்பதும் அனைவருக்குமான கடமை.
பெண் சிசுக் கொலை: ஹிந்து மதத்தில் பெண் சிசுக் கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பெண் சிசுவை கருவிலேயே அழித்தொழிப்பதைக் காட்டிலும் மோசமான பாவச் செயல் வேறு எதுவுமில்லை.
இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 900 பெண்கள் என்று பாலின விகிதம் குறைந்துள்ளது. சமநிலையற்ற இந்தச் சூழலுக்குக் காரணம் பெண் சிசுக் கொலைகள்தான். இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். மதத்தின் பார்வையில் இந்த விவகாரத்தை அணுகாமல், கடுமைûயான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
"தலாக்' முறைக்கு எதிர்ப்பு: தற்போது "தலாக்' விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் பெண் சிசுக் கொலையைப் போலவே, பெண்களுக்கு எதிரான செயல்பாடுதான். ஜனநாயக நாட்டில், எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். "தலாக்' விவகாரத்திலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது. ஆனால், ஒரு சிலரோ அதுகுறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைக்கு முன்வராமல், மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முஸ்லிம் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டாமா? அவர்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டாமா? என்பதற்கு நீங்கள்தான் (மக்கள்) பதில் கூற வேண்டும். "தலாக்' விவகாரத்தை சில கட்சிகள் அரசியலாக்குகின்றன. அற்ப ஆதாயத்துக்காகவும், வாக்குக்காகவும் அக்கட்சிகள் இவ்வாறு நடந்து கொள்கின்றன. ஊடகங்களும் இந்த விவகாரத்தை மதரீதியாகவே அணுகுகின்றன.
ஹிந்து - முஸ்லிம் பிரச்னையாகவோ, பாஜக - முஸ்லிம் அமைப்புகளின் பிரச்னையாகவோ இதைக் கொண்டு செல்லக் கூடாது. பெண்ணுரிமையைப் பறிக்கும் "தலாக்' நடைமுறை இருக்கலாமா? வேண்டாமா? என்ற கோணத்தில்தான் ஊடகங்கள் விவாதம் நடத்த வேண்டும்.
"தலாக்' என்ற பெயரில் முஸ்லிம் சகோதரிகளின் வாழ்க்கையை பாழாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் பிரதமர் மோடி.

"உத்தரப் பிரதேசம் உத்தமப் பிரதேசமாக மாறும்'
உத்தரப் பிரதேசப் பேரவைத் தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றி பெறச் செய்தால், மாநிலத்தில் ஊழலை அடியோடு ஒழிப்போம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியமைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜவாதி கட்சியும் வளர்ச்சியடைந்துள்ளன. அந்தக் கட்சிகளின் தலைவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. ஆனால், மாநிலத்தில் வசிக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.
எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் பிடிகளில் இருந்து மக்கள் வெளியே வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். அப்படிச் செய்தால் உத்தரப் பிரதேசம், ஊழல் இல்லாத உத்தமப் பிரதேசமாக உருமாறும் என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com