ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க இசைவு

"ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்; இதற்கான ஏற்பாடுகளை செய்து தர 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றத்தில் தர்கா அறக்கட்டளை திங்கள்கிழமை தெரிவித்தது.

"ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்; இதற்கான ஏற்பாடுகளை செய்து தர 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றத்தில் தர்கா அறக்கட்டளை திங்கள்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை உள்ளது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அதேநேரத்தில், ஹாஜி அலி தர்காவை நிர்வகிக்கும் அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தனது தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மும்பை உயர் நீதிமன்றம் 6 வார காலம் இடைக்காலத் தடையும் விதித்தது.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர், நீதிபதிகள் டி.ஒய். சந்திராசூட், எல். நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஹாஜி அலி தர்கா தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடுகையில், "இந்த வழக்கில் ஹாஜி அலி தர்கா தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில், ஹாஜி அலி தர்காவுக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெண்கள் தர்காவுக்குள் செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு 4 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதன்பின்னர் நீதிபதிகள் கூறுகையில், "ஹாஜி அலி தர்கா அறக்கட்டளைக்கு 4 வார கால அவகாசம் அளிக்கப்படுகிறது; இந்த விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தர்கா அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 17-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனு தொடர்பாக ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை முடிவு செய்வதற்கு வசதியாக மும்பை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்புக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com