காஷ்மீரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்: பிரதமரிடம் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அங்குள்ள பல்வேறு தரப்பினரிடமும்
காஷ்மீரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்: பிரதமரிடம் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அங்குள்ள பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஃபருக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தச் சம்பவங்களில் இதுவரை 2 போலீஸார் உள்பட 85 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக, மாநிலத்தில் ஓரளவுக்கு வன்முறைச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், இன்னமும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. பெரும்பாலான கல்வி நிலையங்கள் மூடப்பட்டே உள்ளன.
இந்நிலையில், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்கள் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அங்கிருந்த செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் அங்குள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என பிரமதர் மோடியிடம் வலியுறுத்தினேன். இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் மட்டுமே மாநிலத்தில் அமைதியான சூழல் திரும்ப வாய்ப்புள்ளதாக அவரிடம் தெரிவித்தேன். எனது கருத்துகளை பிரதமர் பொறுமையாக கேட்டறிந்தார்.
பின்னர், எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார் என்றார் ஃபரூக் அப்துல்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com