நீதித் துறையை முடக்க விரும்புகிறதா மத்திய அரசு? உச்ச நீதிமன்றம் கேள்வி

நீதிபதிகள் நியமனத்தை தாமதப்படுத்துவதன் மூலம் நீதித் துறையை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நீதித் துறையை முடக்க விரும்புகிறதா மத்திய அரசு? உச்ச நீதிமன்றம் கேள்வி

நீதிபதிகள் நியமனத்தை தாமதப்படுத்துவதன் மூலம் நீதித் துறையை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, நீதித் துறையை மத்திய அரசால் முடக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசுச் செயலர்களுக்கு சம்மன் அனுப்புவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
நீதிபதிகள் நியமன நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்கிறதா? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "நீதிமன்றத்தை முடக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களில் ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால், அதை எங்களுக்குத் திருப்பி அனுப்பி விளக்கம் கேட்கலாம். ஆனால், நியமனத்தையை தாமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்நிலை தொடருமானால் அரசமைப்பு சட்ட அமர்வை மீண்டும் கூட்ட நேரிடும்' என்று கண்டிப்புடன் கூறினர்.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நீதிபதிகள் நியமனப் பரிந்துரையை செயல்படுத்தாமல் தாமதிப்பதன் மூலம் நீதிமன்றங்களை முடக்கிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறதா? என்றும் நீதிபதிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை "கொலீஜியம்' (நீதிபதிகள் குழு) முறை வாயிலாக நியமிக்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அதில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தும் விதமாக, நீதிபதிகள் நியமன வழிகாட்டி நெறிமுறைகளைத் தயாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
அதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது "கொலீஜியம்' குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதைப் பரிசீலித்த "கொலீஜியம்' குழு, அதில் இடம்பெற்றிருந்த சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இதற்கு நடுவே பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நியமிக்கப்பட வேண்டிய நீதிபதிகளின் பெயர்களை "கொலீஜியம்' குழு பரிந்துரைத்தபோதிலும், அதற்கான நடைமுறைகளை அரசு துரிதப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்த டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் மத்திய சட்டத் துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தின் செயலர்களுக்கு சம்மன் அனுப்பும் நிலை ஏற்படலாம் என்று எச்சரித்தது. இதுகுறித்து நீதிபதிகள் மேலும் தெரிவித்ததாவது:
புதிய வழிகாட்டி நெறிமுறை இறுதி செய்யப்படாவிட்டாலும் நீதிபதிகள் நியமனத்தை மேற்கொள்வோம் என்று ஏற்கெனவே மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது அதைக் காரணமாகக் காட்டி நீதிபதிகள் நியமனத்தை அரசு காலந்தாழ்ந்தி வருகிறது.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக கர்நாடகம் உள்பட பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களின் விசாரணை அறைகள் பூட்டிக் கிடக்கின்றன. அதேபோல் நீதித்துறையையும் பூட்டுப்போட்டு முடக்கி விடவே மத்திய அரசு விரும்புகிறதா? அது ஒருபோதும் நடக்காது.
நீதிபதிகள் நியமனத்தைப் பொருத்தவரை, எந்தவிதமான தடங்கல்களோ அல்லது தாமதமோ இருக்கக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன் பிறகு மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி வாதிடுகையில் "நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய வழிகாட்டி நெறிமுறை இன்னமும் இறுதி செய்யப்படாததும் கால தாமதத்துக்கு ஒரு காரணம்' என்று தெரிவித்தார். விரைவில் நியமன நடைமுறைகளை துரிதப்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதையடுத்து வழக்கின் மீதான விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

"கொலீஜியம்' குழு விரைந்து முடிவெடுக்க வேண்டும்: மத்திய அரசு
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு, நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய வழிகாட்டி நெறிமுறையை பரிசீலித்து "கொலீஜியம்' குழு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நீதிபதிகள் நியமனத்தை விரைந்து மேற்கொள்வதற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதேவேளையில், புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து "கொலீஜியம்' குழு துரிதமாக முடிவெடுக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களில் 84 நீதிபதிகள் அண்மைக் காலங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 121 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 14 தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தவிர பல்வேறு நியமன நடைமுறைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com