லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் குற்றச்சாட்டு

லூயி பெர்கர் லஞ்ச வழக்கில் தம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் குற்றம்சாட்டியுள்ளார்.

லூயி பெர்கர் லஞ்ச வழக்கில் தம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் குற்றம்சாட்டியுள்ளார்.
ஜப்பான் நாட்டு நிதிதயுடவியுடன் கோவாவிலும், அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியிலும் குடிநீர்-வடிகால் குழாய் அமைக்கும் பணிகள் கடந்த 2010-இல் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும் பொறுப்பு அமெரிக்க நிறுவனமான லூயி பெர்கர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆர்டரைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் அப்போதைய கோவா முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திகம்பர் காமத், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் சர்ச்சில் அலேமா, மர்மகோவா நகராட்சி மன்றத் தலைவர் ஆர்தர் டிசில்வா ஆகியோருக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கோவா குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது. லஞ்சம் பெற்றதாக திகம்பர் காமத் உள்ளிட்டோர் மீதும், அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக லூயி பெர்கர் நிறுவன அதிகாரிகளான ஜேம்ஸ் மெக்ளங் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கோவா குற்றப்பிரிவு காவல்துறை 1,000 பக்க குற்றப்பத்திரிகையை பனாஜியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. அதில் திகம்பர் காமத்தை "முதன்மை சதிகாரர்' என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து திகம்பர் காமத், பனாஜியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்த விவகாரத்தில் எனக்குத் தொடர்பில்லை என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். எனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த வழக்கு. யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கலாம். ஆனால் அவற்றை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்சும். எனக்கு எதிரான இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை கோவா குடிமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு, எனது தொகுதியான மர்மகோவாவைச் சேர்ந்த மக்கள் அடுத்த ஆண்டு (2017) நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் உரிய பதிலடியைக் கொடுப்பார்கள்.
நான் கடவுள் மீதும், நீதித்துறை மீதும் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த விவகாரத்தை அவர்களிடமே விட்டு விட்டேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com