உ.பி.: மருத்துவமனையில் உயிரிழந்த தந்தையின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற மகன்

உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலைக் கொண்டுசெல்ல அவசரக்கால ஊர்தி...

உத்தரப் பிரதேச மாநிலம், பிலிபிட் மாவட்டத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலைக் கொண்டுசெல்ல அவசரக்கால ஊர்தி மறுக்கப்பட்டதாகக் கூறி, தள்ளுவண்டியில் உடலை வைத்து அவரது மகன் எடுத்துச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தை துளசிராமை பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அவரது மகன் சுராஜ் அனுமதித்தார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு அவசரக்கால ஊர்தியை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுராஜ் கூறியதாவது:
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட எனது தந்தையை பிலிபிட் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் அனுமதித்தேன். ஆனால், மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கவே ஒன்றரை மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு, சிகிச்சை பலனின்றி என் தந்தை உயிரிழந்துவிட்டார்.
மருத்துவமனை ஊழியர்கள் தந்தையின் உடலை எடுத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அவசரக்கால ஊர்தியும் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததால் வேறு வழியில்லாமல் தள்ளுவண்டியில் உடலை எடுத்துச் சென்றேன் என்று சுராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரான ஆர்.சி. சர்மாவை தொடர்புகொண்டு கேட்டபோது, அவசரக்கால ஊர்தியைக் கேட்டு தன்னை யாரும் அணுகவில்லை என்று அவர் தெரிவித்தார். சில நாள்களுக்கு முன்பு ஒடிஸா மாநிலத்திலும் அவசரக்கால ஊர்தி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறி, உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை கணவர் தோளில் தூக்கிச் சென்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com