காசியில் 100 ஆண்டுகளுக்குப் பின் முன்னோருக்கு திதி கொடுத்த திருநங்கைகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் ஒன்று சேர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான காசியில் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, நீத்தார் கடன்களை நிறைவேற்றின
காசியில் 100 ஆண்டுகளுக்குப் பின் முன்னோருக்கு திதி கொடுத்த திருநங்கைகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் ஒன்று சேர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான காசியில் (வாராணசியில்) தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, நீத்தார் கடன்களை நிறைவேற்றினர்.
முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வு, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நிகழ்ந்துள்ளது. புரட்டாசி மாதப் பிறப்பிலிருந்து 16 நாள்களுக்கு மஹாளய பட்சம் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னோர்களை வழிபடும் காலமாக கருதப்படும் இந்த காலகட்டத்தின்போது, முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பதற்காக புனித நகரமான வாராணசிக்கு நாடு முழுவதிலுமுள்ள திருநங்கைகள் வருகை தந்தனர்.
தங்களது மதத் தலைவரான மஹாமண்டலேஸ்வர் சுவாமி லட்சுமி நாராயண திரிபாடி தலைமையில் வாராணசிக்கு வருகை தந்த திருநங்கைகள் காசி விஸ்வநாதரையும், அன்னபூரணியையும் வழிபட்டனர். பின்னர் எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கங்கை நதியில் பூஜை செய்தனர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அத்துடன் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
இதுகுறித்து திருநங்கைகளில் ஒருவர் தெரிவித்ததாவது:
வேத விற்பன்னர்கள் எங்களை ஒதுக்கி வைத்ததால், பல ஆண்டுகளாக முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு எங்களால் முடிய வில்லை. அதனால் நாங்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி இங்கு (வாராணசி) வந்துள்ளோம். முதல்முறையாக முகாலயர்கள் காலத்தில் திருநங்கைகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ததாக அறிகிறோம். அதன்பிறகு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக தர்ப்பணம் செய்கிறோம்.
இந்தச் சடங்குகளின்போது எங்களுக்கு வழிகாட்டியாகவும், நண்பர்களாகவும் இருந்து உயிர் நீத்த திருநங்கைகள் அடுத்த பிறவியில் இயல்பாக பிறக்கவும், போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் எங்களுக்கு மறுபிறவியில் எவ்வித பிறவிக் குறைபாடும் இல்லாமல் நல்ல நிலையில் பிறக்கவும் காசி விஸ்வநாதரையும், கங்கை மாதாவையும் பிரார்த்திக்கிறோம் என்று அந்த திருநங்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com