பயங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா மறக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியக் கவுன்சில் கூட்டம், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் தொடங்கியுள்ளது. இதையொட்டி, கோழிக்கோடு கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
உலக அளவில் பயங்கரவாதத்தை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து ராஜ்ஜீய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். உரி தாக்குதல் சம்பவத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதை பயங்கரவாதிகள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உரியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர் தியாகம் செய்தது வீண்போகாது என்பதை பாகிஸ்தான் தலைமைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரி தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானே நேரடி பொறுப்பாகும். பயங்கரவாதத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இதுதான், உரியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணம்.
ஆசியாவில் உள்ள ஒரு நாடு (பாகிஸ்தான்), பயங்கரவாதத்தை உலகின் பிற நாடுகளுக்கு பரப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்படுகிறது. 21-ஆம் நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாக அமைந்து விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் திட்டத்துடன் அந்நாடு செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத் தாக்குதல் எங்கு நடைபெற்றாலும், அதற்கு குறிப்பிட்ட ஒரு நாட்டையே (பாகிஸ்தான்) அனைத்து நாடுகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என்று உலகின் எந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடைபெற்றாலும், இந்த நாட்டில் இருந்து சென்ற பயங்கரவாதிகள்தான் காரணமாக இருப்பார்கள். அல்லது தாக்குதலை நிகழ்த்திவிட்டு, அந்த நாட்டில் (பாகிஸ்தானில்) தஞ்சமடைந்திருப்பார்கள்.
110 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பயங்கரவாதத்துக்கு இந்தியா இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அடிபணியாது. பயங்கரவாதத்தை இந்தியா முறியடிக்கும். பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட தற்கொலைப்படை பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் 17 முறை ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சிகளை துணிச்சல்மிக்க இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். அப்போது அவர்கள், 110 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அண்மைக் காலங்களில், தற்போதுதான் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மானுடப் பண்புக்கு பயங்கரவாதம், மிகப்பெரிய எதிரியாகும். எனவே, உலகம் முழுவதும் இருக்கும் மனிதநேயவாதிகள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர வேண்டும்; பயங்கரவாதத்தை ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தான் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு: காஷ்மீரைப் பிரிக்க நினைக்கும் பயங்கரவாதிகள் எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளை நமது அண்டை நாட்டுத் தலைவர்கள் வாசிக்கின்றனர். அத்தகைய தலைவர்களுடன் பேசுவதால் பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இன்றுமுதல், பாகிஸ்தான் மக்களுடன் நான் நேரடியாக பேசப்போகிறேன். பாகிஸ்தான் மக்களே, உங்களது மூதாதையர்கள் கடந்த 1947-ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியாவைத்தான் தங்களது தாய்மண்ணாக நினைத்தனர்; இந்த மண்ணுக்கு மரியாதை தந்தனர்.
வங்கதேசம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பக்டூனிஸ்தான், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை ஏன் உங்களால் சரிவர நிர்வகிக்க முடியவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பேசி, எங்களை ஏன் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றும், தங்களது ஆட்சியாளர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேட்க வேண்டும்.
இந்தியா மென்பொருளையும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும் ஏற்றுமதி செய்கிறது: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே சுதந்திரம் பெற்றன. இந்தியா மென்பொருளை ஏற்றுமதி செய்கிறது, ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இதுகுறித்து தங்கள் நாட்டுத் தலைவர்களிடம் பாகிஸ்தான் மக்கள் கேட்க வேண்டும்.
இந்தியாவுடன் 1,000 ஆண்டுகளுக்கு போரிடுவோம் என்று பாகிஸ்தான் தலைவர்கள் தெரிவித்து வந்தனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? இந்தச் சவாலை இந்தியா ஏற்கிறது என்பதை பாகிஸ்தான் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தானுடன் சண்டையிட இந்தியாவுக்கும் விருப்பம்தான். ஆனால் அந்தச் சண்டை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? உங்களுக்கு துணிச்சல் இருந்தால், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றுக்கு முடிவு கட்டுவதற்கு ஏன் நீங்கள் சண்டையிடக் கூடாது. அப்போது, வெற்றி இந்தியாவுக்கு சொந்தமாகிறதா? பாகிஸ்தானுக்கு சொந்தமாகிறதா? என்பதை நாம் பார்க்கலாம் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவின் தலைமையகத்தில் உள்ள முகாம் மீது பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பே காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக தில்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த ஆதாரங்களை அளித்ததுடன், தனது கடும் கண்டனத்தையும் மத்திய அரசு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com