ரஃபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும்

ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா - பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ரஃபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும்

ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா - பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணி கூறியதாவது:
பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரூ.59,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஆனால், ஐக்கிய முன்னணி ஆட்சியில் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டபோது, போர் விமானங்களை மட்டுமின்றி, அந்த விமானங்களின் தயாரிப்புத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
ஆனால், தொழில்நுட்பப் பரிவர்த்தனை இல்லாமல் போர் விமானங்களை மட்டும் வாங்க தற்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்தியாவுக்கு மிகவும் பாதகமாக அமையும்.
இந்த வகையில், விமானக் கொள்முதல் திட்டத்தில் இருந்த "இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட அம்சம், தற்போதைய அரசால் நீக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையின் வலிமையைப் பெருக்கும் வகையில், 126 போர் விமானங்களை வாங்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் (18 போர் விமானங்களைக் கொண்ட) 42 படைப் பிரிவுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 32 படைப் பிரிவுகள் மட்டும் அமைக்கப்படுவது சீனா, பாகிஸ்தான் விமானப் படைகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்குப் போதுமானது இல்லை.
இதே நிலை நீடித்தால், ஓய்வு பெறும் போர் விமானங்கள் போக 2022-ஆம் ஆண்டில் வெறும் 25 படைப்பிரிவுகள் மட்டுமே இருக்கும்.
தற்போதைய அரசு பிரான்ஸýடன் பேரம் பேசி இந்த ஒப்பந்த்தில் ஏராளமான தொகையை மிச்சப்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திய ரஃபேல் விமானத்தின் விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட முடியாது.
ரஃபேல் ஒப்பந்த விவரங்கள் தெரியாமல் இதுகுறித்து எதுவும் கூற முடியாது.
எனவே, இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றார் ஏ.கே. அந்தோணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com