3 நாள்களுக்கு 6,000 கன அடி தண்ணீர்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரை புதன்கிழமை (செப்டம்பர் 28) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) வரை திறந்து விட வேண்டும்
3 நாள்களுக்கு 6,000 கன அடி தண்ணீர்: கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரை புதன்கிழமை (செப்டம்பர் 28) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) வரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் 30-ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6,000 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று கடந்த 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதேபோல, கர்நாடகத்தின் மனுவை விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாஃப்டே ஆஜராகி, "காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இதுவரை கர்நாடக அரசு அந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தவில்லை. மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருக்க கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்' என்று வாதிட்டார்.
பேரவை தீர்மானம்: அப்போது கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராகி கர்நாடக அரசின் தற்போதைய நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன்பிறகு அவர் முன்வாத்த வாதம்:
காவிரிப் படுகைகளில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை கருத்தில் கொண்டு கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலையில் தமிழகப் பாசனதுக்காக இனி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட இயலாது.
விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால், தனது நீர்த் தேவையை தமிழகத்தால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தர வேண்டிய நிலுவை நீரை வரும் நவம்பர் மாத இறுதிக்குள் திறந்து விடுகிறோம் என்று அவர் வாதிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, "தமிழகத்துக்கு உரிய நீரை தற்போது திறந்துவிட முடியாத கர்நாடக அரசால் நவம்பர் மாத இறுதிக்குள் மட்டும் எவ்வாறு திறக்க முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஃபாலி நாரிமன், "கடவுளின் விருப்பப்படி நிகழும்' என்றார்.
தமிழகம் எதிர்ப்பு: கர்நாடக அரசின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழக அரசின் வழக்குரைஞர் சேகர் நாஃப்டே, "நீதித் துறையில் மிக உயரிய அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமல், உத்தரவில் மாற்றம் கோரும் மனுவை மீண்டும், மீண்டும் கர்நாடக அரசு தாக்கல் செய்வதால், பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொண்டு பிறகு பயன்படுத்த நாங்கள் (தமிழகம்) ஒட்டகம் கிடையாது. தமிழகத்தில் சம்பா பயிர் சாகுபடியை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்ய முடியும். தற்போது நீர் திறந்து விடப்படாவிட்டால் நவம்பர் மாத இறுதியில் தண்ணீர் வந்தாலும் பயிர்களுக்கு பயன் இருக்காது' என்றார்.
மத்திய அரசுக்கு கேள்வி: இதையடுத்து, நீதிபதிகள் "இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்' என்று கூறினர்.
அப்போது முகுல் ரோத்தகி, "இந்த விஷயத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியானது அல்ல. இரு மாநில அரசுகளும் சம்மதித்தால் அவற்றை அழைத்துப் பேச மத்திய அரசு தயாராக உள்ளது' என்றார்.
6,000 கன அடி நீர் திறக்க உத்தரவு: இந்த யோசனைக்கு தமிழக அரசுத் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதைக் கவனத்தில் கொள்ளாமல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: காவிரி நீர் திறப்பு தொடர்புடைய மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை மதித்து இரு மாநில அதிகாரிகளும், மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் பங்கேற்று நீர்ப் பங்கீட்டில் நிலவும் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்.
இதற்கு இடையே மூன்று நாள்கள் அதாவது, புதன்கிழமை (செப்டம்பர் 28) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 6,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மோதல் போக்குடன் வாதிட்ட கர்நாடகம்
காவிரியில் இருந்து மூன்று நாள்களுக்கு தினமும் வினாடிக்கு 6,000 கன அடி அளவில் நீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதற்கு கர்நாடக அரசு வழக்குரைஞர் ஃபாலி எஸ். நாரிமன் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வாதிடுகையில், "கர்நாடக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி தமிழகத்துக்கு எவ்வாறு தண்ணீர் திறந்து விட முடியும்? உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இதுபோன்ற உத்தரவால் நீதித்துறை - பேரவை இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாக்கியுள்ளது' என்றார்.
இதையடுத்து, தமிழக வழக்குரைஞர் சேகர் நாப்டே, "கர்நாடக சட்டப்பேரவை தீர்மானத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றத்துக்கு அம்மாநில அரசு பாடம் நடத்துகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பேச்சு நடத்துவதால் எவ்வாறு தீர்வு கிடைக்கும்?' என்றார்.
இதையடுத்து, "இரு நாள்களுக்கு தமிழக அரசு பொறுமை காக்க வேண்டும். கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அது உச்ச நீதிமன்ற உத்தரவை கட்டுப்படுத்தாது' என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


இன்று அமைச்சரவைக் கூட்டம்
காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பெங்களூரில் புதன்கிழமை அனைத்துக் கட்சி மற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
காவிரி நதியில் இருந்து 3 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், இது குறித்து விவாதிக்க பெங்களூரு விதான செளதாவில் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை அனைத்துக் கட்சிகளின் கூட்டத்துக்கும், அங்கு எடுக்கப்படும் முடிவு குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மாலை 3 மணிக்கு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள், சட்டப்பேரவை தீர்மானத்தை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியுமா? உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளினால் ஏற்படும் விளைவுகள், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் ஏற்படும் இழப்பு ஆகியவை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com