உரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரிடம் ஆதாரங்களை அளித்தது இந்தியா

உரி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை அந்நாட்டுத் தூதரை நேரில் அழைத்து இந்தியா அளித்தது.

உரி தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரத்தை அந்நாட்டுத் தூதரை நேரில் அழைத்து இந்தியா அளித்தது. இத்தாக்குதல் நடைபெற்ற பிறகு பாகிஸ்தான் தூதர் நேரில் அழைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
உரி தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை மத்திய அரசு ஏற்கெனவே நேரில் வரவழைத்து, கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வருமாறு பாசித்துக்கு வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் அழைப்பாணை அனுப்பினார். அப்போது, உரி தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவரான ஹஃபீஸ் அகமது என்பவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபராபாதைச் சேர்ந்த ஃபெரோஸ் என்பவரின் மகன் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பாசித்திடம் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் இருந்து வழிநடத்தி அனுப்பி வைத்த நபர்களின் விவரங்களையும் ஒப்படைத்தார். அப்போது ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:
உரி தாக்குதலிர் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து, அவர்கள் ஊடுருவுவதற்கு உதவி செய்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த 2 இளைஞர்களை உள்ளூர் கிராமவாசிகள் கடந்த 21ஆம் தேதி பிடித்து, இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞர்களில் ஒருவரது பெயர் ஃபைசல் ஹுசேன் அவான் (20). அவர் முசாஃபராபாதைச் சேர்ந்த போட்டா ஜஹாங்கீர் என்பவரின் மகனாவார். மற்றொரு இளைஞரின் பெயர் யாசின் குர்ஷீத் (19). அவர் முசாஃபராபாதைச் சேர்ந்த கிலியானா கலான் என்பரின் மகனாவார். அவானிடம் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையின்போது, உரி தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு தாம் வசதி செய்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இந்தியாவுக்கு எதிராக தங்கள் மண்ணில் இருந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ஏற்கெனவே அளித்துள்ள வாக்குறுதியை அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஏற்க முடியாதவை என்று அப்துல் பாசித்திடம் ஜெய்சங்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இத்தகவல்களை தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com