சஹாபுதீனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய பிரமுகரும், லாலுவுக்கு நெருக்கமானவருமான முகமது சஹாபுதீனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய பிரமுகரும், லாலுவுக்கு நெருக்கமானவருமான முகமது சஹாபுதீனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான உத்தரவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவான் தொகுதி முன்னாள் எம்.பி. முகமது சஹாபுதீன், 12 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்.
இந்த வழக்கில் அவருக்கு பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து கடந்த 10-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சஹாபுதீனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது "சஹாபுதீன் ஜாமீனில் வெளியே வரும் வரை உறங்கிக் கொண்டிருந்தீர்களா?' என பிகார் அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணை வியாழக்கிழமையும் தொடர்ந்தது.
அப்போது சஹாபுதீனின் வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட தரப்பினரின் வழக்குரைஞர், அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆகியோரின் வாதங்கள் முடிவடைந்தன.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், வழக்குரைஞர்கள் தங்கள் இறுதி வாதத்தை முடித்துக் கொண்ட நிலையில், ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான உத்தரவை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com