பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் அவசியமானது: பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதல், அவசியமான நடவடிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதல், அவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்தத் தாக்குதலை, "அறுவைச் சிகிச்சை' என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
இதுதொடர்பாக, முன்னாள் ராணுவ அதிகாரி எஸ்.பிரசாத் கூறியதாவது:
முதலில் இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்திய ராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவத்தினர் உணர்ந்து, அதற்கேற்றவாறு இனிமேல் செயல்பட வேண்டும்.
பயங்கரவாதிகளின் இருப்பிடம் குறித்து துல்லியமாக தகவல்களைக் கொடுத்த உளவுத் துறையையும், ராணுவத்தினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அனுமதியளித்த மத்திய அரசையும் பாராட்டுகிறேன் என்றார் அவர்.
இதேபோல், முன்னாள் "ரா' உளவுப் பிரிவு அதிகாரி சி.டி.சஹாய் கூறியதாவது:
பயங்கரவாத முகாம்கள் மீதான அதிரடி தாக்குதல், இந்திய அரசின் பக்குவமான அணுகுமுறையாகும். பயங்கரவாதிகள் வரம்பு மீறி செயல்பட்டதால், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது, அவசியமான நடவடிக்கையாகும் என்றார் அவர்.
பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் சம்பவம், "நீண்ட காலமாக தீர்க்கப்படாத கடன், தற்போது திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது' என்று ராணுவ உயரதிகாரி ஜி.டி.பக்ஷி கூறினார்.
இதேபோல், முன்னாள் கடற்படை அதிகாரி ஜி.ஜே.சிங் கூறுகையில், ""பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ராணுவ நடவடிக்கை என்பதை பாகிஸ்தான் அரசு புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார்.
மெஹபூபா கவலை: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கவலை அடைந்துள்ளார்.
இந்த மோதல் போக்கு, காஷ்மீர் மாநிலத்தில் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் நாங்கள், வன்முறையால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். எனவே, வன்முறையின் அபாயத்தையும், அதன் பின் விளைவுகளையும் நன்றாகவே அறிவோம்.
இந்த நேரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். போர் போன்ற சூழலை உருவாக்கி விடக் கூடாது.
எல்லைப் பகுதியில் நிகழும் மோதல்களால் அபாயகரமான பின்விளைவுகளை உருவாக்கி விடும் என்பதை உணர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகளைத் தொடங்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com