கெஜ்ரிவாலிடம் காசு இல்லாவிட்டால் இலவசமாக வாதாடியதாக இருக்கட்டும்: ராம்ஜெத்மலானி

அவருக்காக அவதூறு வழக்கில் வாதாடியதற்கு கொடுப்பதற்கு பணம் இல்லை என்றால் இலவசமாக வாதாடியதாக இருக்கட்டும் என்று ...
கெஜ்ரிவாலிடம் காசு இல்லாவிட்டால் இலவசமாக வாதாடியதாக இருக்கட்டும்: ராம்ஜெத்மலானி

புதுதில்லி: அவருக்காக அவதூறு வழக்கில் வாதாடியதற்கு கொடுப்பதற்கு பணம் இல்லை என்றால் இலவசமாக வாதாடியதாக இருக்கட்டும் என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை பற்றி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தில்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் அருண் ஜேட்லி பணியாற்றிய பொழுது நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியதற்கு  எதிர்ப்பு தெரிவித்தே அந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் கெஜ்ரிவால் சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.

இதற்காக அவர் ரூ.3.4 கோடி ரூபாயை கட்டணமாக கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த தொகையை செலுத்துமாறு தில்லி மாநில நிர்வாகத்திற்கு கெஜ்ரிவால் அனுப்பியிருந்தாக தகவல் வெளியானது. இது பெரிய சர்ச்சையை கிளப்பியது. அரசு பணத்தை தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு செலவு செய்வதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. தில்லி துணை நிலை ஆளுநரும், அரசின் இந்த செயல் குறித்து மாநில சொலிசிட்டர் ஜெனரலிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இது பற்றிய தகவல் வெளியானதும் ராம்ஜெத்மலானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுதுஅவர் கூறியதாவது:  

நான் வழக்கமாக என்னுடைய பணக்கார வாடிக்கையாளர்களிடம் மட்டும்தான் வாதாடியதற்கு கட்டணம் வாங்குவேன். அதே சமயம் ஏழைகளுக்கு இலவசமாகத்தான் வாதிடுவேன். இப்பொழுது தில்லி அரசிடமோ அல்லது கெஜ்ரிவாலிடமோ எனக்கு கொடுப்பதற்கு  பணம் இல்லையென்றால், நான் இலவசமாகவே வாதாடுவேன். அவர்களை நான்  என்னுடைய ஏழை வாடிக்கையாளர்களில் ஒருவராக கருதிக் கொள்கிறேன்.

என்னுடைய வாதத் திறமைக்கு பயந்துதான் இத்தகைய நடவடிக்கைகளை ஜேட்லி தூண்டி விடுகிறார்.

இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com