மனத் துயரங்களை ஒரே மேடையில் பகிர்ந்து கொண்ட அத்வானி, ஷேக் ஹசீனா

வங்கதேசத் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்த தலைவரும் தங்களது கண்ணீர் கதையை ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டபோது அனைவரது மனமும் கனக்கச் செய்தது.
மனத் துயரங்களை ஒரே மேடையில் பகிர்ந்து கொண்ட அத்வானி, ஷேக் ஹசீனா

புது தில்லி: வங்கதேசத் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்த தலைவரும் தங்களது கண்ணீர் கதையை ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டபோது அனைவரது மனமும் கனக்கச் செய்தது.

அந்த இரு தலைவர்கள் யார் என்றால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பாஜக தலைவர் எல்.கே. அத்வானியும்.

ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் ஷேக் ஹசீனா, தனது தாய் நாட்டுக்கு வருவது போலவே மகிழ்ச்சி அடைவார். வங்கதேச பிரதமராக தற்போது இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, 1975ம் ஆண்டு தனது குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹசீனா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். அப்போது பேசுகையில், வன்முறையாளர்கள் எங்கள் வீட்டையும் சேர்த்து 3 வீடுகளை சூறையாடினர். 18 பேரை கொலைசெய்தனர். அங்கே எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். எங்களுக்கு யாருமே இல்லை. வீடில்லை, நாடில்லை. அகதிகளாக நின்றோம். அந்த நேரத்தில்தான், இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, எங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேச பிரதமருமான ஷேக் முஜிபுர் ரெஹ்மான், தாய், 3 சகோதரர்கள், புதிதாக திருமணமாகி வந்த 2 அண்ணிகள், மாமா என அனைவரையும் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். அப்போது ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் ஜெர்மனியில் இருந்ததால் உயிர் தப்பினர்.

இந்தியா அப்போது எங்களுக்கு அடைக்கலம் தந்திருக்காவிட்டால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்று உருக்கமாகக் கூறினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பாகிஸ்தான் நாட்டோடு சேர்க்கப்பட்ட சிந்து பகுதியில் பிறந்த எல்.கே. அத்வானி, தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். அதாவது, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைவாதத்தால் ஏற்பட்ட துயரங்களை உணர்ந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது அதன் ஒரு பகுதியாக இருந்த இடத்தில் நான் பிறந்தேன். ஆனால், நானும் எனது தோழர்களும் பிறந்த இடம் தற்போது இந்தியாவில் இல்லை என்பதை உணரும் போது வருத்தமாக உள்ளது என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com