மத ரீதியாக இடஒதுக்கீடு நாட்டின் நலனுக்கு நல்லதல்ல: வெங்கய்ய நாயுடு

மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இத்தகைய
மத ரீதியாக இடஒதுக்கீடு நாட்டின் நலனுக்கு நல்லதல்ல: வெங்கய்ய நாயுடு

போபால்: மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
தெலங்கானா சட்டப் பேரவையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையிலான மசோதாவை அந்த மாநில அரசு அண்மையில் நிறைவேற்றியது. அதனை விமர்சிக்கும் வகையில் வெங்கய்ய நாயுடு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா அரசின் இந்த நடவடிக்கைகக்கு பாஜகவைச் சேர்ந்த பிற தலைவர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசுப் பணி மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா தெலங்கானா பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இதில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான கூடுதல் இடஒதுக்கீட்டை ஆதரித்த பாஜகவினர், முஸ்லிம்களுக்கான சலுகைகளை எதிர்த்து வருகின்றனர். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இதுகுறித்து கூறியதாவது:
பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவே இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஹிந்துவோ, கிறிஸ்தவரோ, சமணரோ, இஸ்லாமியரோ அவர் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இடஒதுக்கீட்டுச் சலுகை என்பது அவர்களது பொருளாதார நிலை அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அதில் எங்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது.
மத ரீதியாக இடஒதுக்கீடு வழங்குவது தேசத்தின் நலனுக்கு உகந்ததல்ல. மாறாக, அத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com