அத்வானி, ஜோஷி, உமா பாரதியிடம் மீண்டும் விசாரணை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்துவதற்கு
அத்வானி, ஜோஷி, உமா பாரதியிடம் மீண்டும் விசாரணை: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்துவதற்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக உள்ளார். எனவே, அவர் ஆளுநர் பதவியில் நீடிக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர்களுக்கு 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோரிடம் சிபிஐ மறுவிசாரணை நடத்த அனுமதிக்கிறோம். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்யாண் சிங், தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருப்பதால், அவர் பதவியில் நீடிக்கும் வரை அவரிடம் விசாரணை நடத்த முடியாது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக, லக்னெள மற்றும் ரேபரேலியில் நடைபெற்று வரும் இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலேயே விசாரணை நடத்தப்படும்.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை லக்னெள சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு இடத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட மாட்டார்.
வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, சாட்சிகள் தினந்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராவதை சிபிஐ அமைப்பு உறுதிசெய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் நாளில் இருந்து 4 வாரங்களுக்குள் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

பிரதமர் முக்கிய ஆலோசனை
பாபர் மசூதி இடிப்பு வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கை எதிர்கொள்வது குறித்தும், இதனால் எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தவிர, காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னணி


சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்பட 21 பேருக்கு எதிராகவும், கரசேவகர்களுக்கு எதிராகவும் சிபிஐ தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தன.
இதில், கரசேவர்களுக்கு எதிரான வழக்கு லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும், பாஜக மூத்த தலைவர்களுக்கு எதிரான வழக்கு ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தன.
அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 13 பேரை வழக்கில் இருந்து விடுவித்து ரேபரேலி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2001-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே, விஹெச்பி தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால், மகந்த் அவைத்யநாத், பரம்ஹம்ஸ் ராம் சந்திர தாஸ், மோரேஷ்வர் சவே உள்ளிட்ட 8 பேர் இறந்துவிட்டனர். இந்நிலையில், வழக்கில் இருந்து பாஜக தலைவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல் முறையீடு செய்திருந்தது. ஆனால், சிபிஐ தரப்பு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இரு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கலாம் என்று கடந்த 6-ஆம் தேதி தெரிவித்திருந்தது.
மேலும், ஏற்கெனவே 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து, 2 ஆண்டுகளில் விசாரணையை முடிப்பதற்கு உத்தரவிடவும் உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்து வந்த பாதை..
டிசம்பர் 1992- பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கரசேவர்களுக்கு எதிராக ஒரு வழக்கும், மசூதி இடிப்புக்கு முன், வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டன.
அக்டோபர் 1993- அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.
மார்ச்-4, 2001- அத்வானி, ஜோஷி, உமா பாரதி, பால் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
நவம்பர்-2, 2004- அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு
மே-20, 2010- சிபிஐ மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பிப்ரவரி 2011- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு
மார்ச்-6, 2017- பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் யோசனை
மார்ச்-21, 2017- பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஆலோசனை
ஏப்ரல்-6 2017- பாபர் மசூதி இடிப்பு வழக்கை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து
ஏப்ரல்-19 2017- அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்கவும், இரு வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com