தில்லியில் டிடிவி தினகரன் கைது: சுகேஷ் சந்திரசேகருக்கு ஏப்.28 வரை காவல் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன்,
தில்லியில் டிடிவி தினகரன் கைது: சுகேஷ் சந்திரசேகருக்கு ஏப்.28 வரை காவல் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அவரது நெருங்கிய நண்பரும் பெங்களூரைச் சேர்ந்தவருமான மல்லிகார்ஜுன் இருவரும் தில்லி காவல்துறையினரால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து 4-ஆவது நாளாக தில்லி காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் முன்பு தினகரன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின்னர், தினகரன், மல்லிகார்ஜுன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தினகரன் முரண்பட்ட தகவல்கள் அளித்தார். பெங்களூரைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் தெரிவித்த தகவல்களும், காவல்துறைக்கு திருப்தியளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்படும் என்று தெரிகிறது.
சுகேஷின் காவல் நீட்டிப்பு: முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
டி.டி.வி.தினகரனிடம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பி.குமாரை திங்கள்கிழமை தனிப் படையினர் தில்லிக்கு அழைத்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். மீண்டும் அவர் தில்லி சாணக்கியபுரியில் உள்ள காவல் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இது குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: டி.டி.வி தினகரனுக்கு சுகேஷ் சந்திரசேகரை வழக்குரைஞர் குமார் அறிமுகப்படுத்தியதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த மூவருக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி அளவுக்கு பேரம் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்ததாகத் தகவல் கிடைத்தது.
ஆனால், அந்தத் தொகை யார் மூலம் எவ்வாறு சுகேஷ் சந்திரசேகருக்கு வழங்கப்பட்டது என்பதை காவல் துறை நிரூபிக்க வேண்டியுள்ளது. எனவேதான் சுகேஷ் சந்திரதேகர், தினகரன் ஆகியோர் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தில்லி காவல் குற்றப் பிரிவு தனிப் படையினரால் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்ட வழக்குரைஞர் பி.குமார் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்காக சென்னை, பெங்களூரு நீதிமன்றங்களில் ஆஜராகி வந்தவர்.
இதற்கிடையே, தில்லி காவல் துறையால் கடந்த 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் சுகேஷ் சந்திரசேகரை குற்றப் பிரிவு தனிப் படையினர் தில்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆஜர்படுத்தினர்.
அப்போது சுகேஷின் வழக்குரைஞர், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபராக தினகரன் உள்ளார். ஆனால், அவரை கைது செய்யாமல் தினமும் காவல் நிலையத்துக்கு வரழைத்து தனிப் படையினர் விசாரிக்கின்றனர். சுகேஷின் காவலை மட்டும் நீட்டிக்க காவல் துறை ஆர்வம் காட்டி வருகிறது' என்றார்.
இதையடுத்து, காவல் துறை குற்றப்பிரிவு சார்பில் சுகேஷ் - தினகரன் இடையிலான தகவல் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த வழக்கில் சுகேஷுக்கு சென்னையில் இருந்து ஹவாலா மூலம் பணம் விநியோகம் செய்த இடைத்தரகர் ஷா ஃபைசல் அடையாளம் காணப்பட்டுள்ளார். அது குறித்து மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. தினகரனும் விரைவில் கைது செய்யப்படுவார்' என்றார்.
இதையடுத்து, நீதிபதி பூணம் சௌத்ரி, "இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மிகவும் பெரியது. தேர்தல் நடைமுறையின் புனிதத்தை களங்கப்படுத்தும் வகையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவலை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com