'ரூ.1,500 கோடியைச் செலுத்தாவிட்டால் சுப்ரதா ராய் சிறை செல்ல வேண்டியிருக்கும்'

ரூ.1,500 கோடியைச் செலுத்தாவிட்டால் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'ரூ.1,500 கோடியைச் செலுத்தாவிட்டால் சுப்ரதா ராய் சிறை செல்ல வேண்டியிருக்கும்'

ரூ.1,500 கோடியைச் செலுத்தாவிட்டால் சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சஹாரா குழுமம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளைத் திரட்டின. எனினும், உரிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்படவில்லை.
இதை எதிர்த்து முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடியை திருப்பித் தருமாறு சஹாரா குழுமத்துக்கு கடந்த 2012, ஆகஸ்ட் 31-இல் உத்தரவிட்டனர். எனினும், அவ்வாறு பணத்தைத் திருப்பித்தர அந்தக் குழுமம் தவறிவிட்டதைத் தொடர்ந்து, அதன் தலைவர் சுப்ரதா ராய், கைது செய்யப்பட்டார்.
பின்னர், சுப்ரதா ராய்க்கு கடந்த ஆண்டு மே 6-ஆம் தேதி நான்கு வார பரோல் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் தற்போது வரை பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சஹாரா குழுமம் தனது முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டிய பணத்தை படிப்படியாக திருப்பித் தருவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் சுப்ரதா ராய் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார். அப்போது, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் அவர் தெரிவிக்கையில், வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் ரூ.1,500 கோடியையும், ஜூலை 15-ஆம் தேதிக்குள் ரூ.552.22 கோடியையும் செலுத்துவதாக உறுதிமொழி அளித்தார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், இந்தத் தொகையை முறைப்படி செலுத்தாவிட்டால் அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரித்தனர்.
பிரகாஷ் எம். சுவாமிக்கு 30 நாள் சிறை


சஹாரா குழுமத்துக்குச் சொந்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலை விலைக்கு வாங்குவதற்கு அதே நகரைச் சேர்ந்த எம்ஜி கேப்பிடல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் முன்வந்தது. அதை ஏற்ற நீதிபதிகள் ரூ.750 கோடியைச் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர்.
எனினும், அந்தத் தொகையை அந்த நிறுவனம் செலுத்தவில்லை. இதனால், முதல்கட்டமாக ரூ.10 கோடியை 10 நாட்களுக்குள் செலுத்துமாறு அந்த நிறுவனத்தின் சார்பில் பவர் ஆஃப் அட்டர்னியாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம். சுவாமிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 10 கோடியை செலுத்தாததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்யுமாறும், நீதிமன்ற அவமதிப்புக்காக அவருக்கு 30 நாள் சிறைத் தண்டனை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com