அமித் ஷாவின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்தது எப்படி?: பாஜக விளக்கம்

அமித் ஷாவின் சொத்துக்கள் 5 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்தது எப்படி?: பாஜக விளக்கம்

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் சொத்துக்கள் ஐந்து


அகமதாபாத்: குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் சொத்துக்கள் ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்தது எப்படி என்ற கேள்விக்கு பாஜக விளக்கம் அளித்துள்ளது.

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் காந்தி நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

அப்போது, அமித் ஷா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்து மதிப்பு 34 கோடியே 40 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருந்தார். அமித் ஷா மற்றும் அவரது மனைவியின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுவில் 10 கோடியே 38 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டிருந்த அமித் ஷாவின் சொத்துமதிப்பு 2017ல் 34 கோடியே 40 லட்சம் ரூபாயாக 300 சதவீதம் (மூன்று மடங்காக) அதிகரித்தது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக, கடந்த 2013 ஆம் ஆண்டு அமித் ஷாவின் தாயார் காலமானதும், 18 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்து அமித் ஷாவுக்கு கிடைத்ததாக கூறியுள்ளது.

இதனால், அமித்ஷாவின் சொத்துமதிப்பு 29 கோடியே 84 லட்சம் ரூபாயாக அதிகரித்து, சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளதால், சொத்து மதிப்பு 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com