கேரளத்தில் தொடரும் வன்முறை: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பினராயி விஜயன் அழைப்பு

கேரளத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி
கேரளத்தில் தொடரும் வன்முறை: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பினராயி விஜயன் அழைப்பு

கேரளத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் அருகே ஆர்எஸ்எஸ் தொண்டர் ராஜேஷ் என்பவர் சனிக்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்தது. எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயன், மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹேரா ஆகியோரை ஆளுநர் பி. சதாசிவம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டார். அப்போது கேரளத்தில் தொடரும் வன்முறைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாஜக, ஆர்எஸ்எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசப் போவதாகவும் பினராயி விஜயன் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஒ. ராஜகோபால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி பி. கோபாலன்குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோருடன் முதல்வர் பினராயி விஜயன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, கேரளத்தில் அமைதியை ஊக்குவிக்கவும், வன்முறைக்கு முடிவு கட்டவும் மாநில அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்க பாஜக, ஆர்எஸ்எஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். இக்கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுதொடர்பாக பினராயி விஜயன் கூறியதாவது:
மாநிலத்தில் அண்மைக் காலமாக நடந்த வன்முறைச் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியதாகும். இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, கண்ணனூர், கோட்டயம், திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் விழிப்போடு இருப்பதோடு, வன்முறைப் பாதையை கைவிடுவது தொடர்பான விழிப்புணர்வை தங்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். முன்பு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, கட்சி அலுவலகங்கள், கட்சித் தலைவர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு மாறாக, பாஜக மாநில தலைமை அலுவலகம், கொடியேறி பாலகிருஷ்ணனின் வீடு ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானதாகும் என்றார் பினராயி விஜயன்.
பாஜக மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாநிலத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவை அளிக்கும்' என்றார்.
முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை, அங்கிருந்து வெளியேறும்படி பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். செய்தியாளர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறிய பிறகே, கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு பினராயி விஜயன் வந்தார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. எனினும், அந்த ஆலோசனை கூட்டத்துக்கு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்தது.
ஆர்எஸ்எஸ், சிஐடியூ அலுவலகங்கள் மீது தாக்குதல்
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியூ அலுவலகம் மீதும் திங்கள்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கோட்டயம் மாவட்டம், திருநக்கராவில் உள்ள ஆர்எஸ்எஸ் மாவட்ட அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல், சிஐடியூ அலுவலகத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அலுவலகத்தில் இருந்த ஏராளமான பொருள்கள் சேதமடைந்ததாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்து 5 பேர் கற்களை வீசியதாகவும், இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரே நடத்தியதாக கோட்டயம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வி.என். வாசவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com