'நீட்' விலக்கு: நட்டாவுடன் விஜயபாஸ்கர் ஒரே நாளில் மூன்று முறை சந்திப்பு

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை திங்கள்கிழமை தம்பிதுரை தலைமையில் சந்தித்த தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்,
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை திங்கள்கிழமை தம்பிதுரை தலைமையில் சந்தித்த தமிழக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்,

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசினார்.
மருத்துவப் படிப்புகள் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் ('நீட்') இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்ட ப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை. இதனிடையே, 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்பட ஐந்து துறைகளின் அமைச்சர்கள் இருமுறை தில்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க உதவுமாறு வலியுறுத்தினர். மேலும், பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து தமிழக மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண உதவுமாறு வலியுறுத்தினர். எனினும், இந்த விவகாரத்தில் எதிர்பார்த்த பலன் இன்னும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்ததுபோல 'நீட்' தேர்வுக்கும் அவசரச் சட்டம் கொண்டு வரலாமா என்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசித்து வந்ததாகக் கூறப்பட்டது.
தில்லியில் விஜயபாஸ்கர்: இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை தில்லி வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஆகியோரை நேரில் சந்தித்தார். அவருடன் தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். அப்போது, 'நீட்' தேர்வுக்கு விலக்குப் பெறும் விவகாரத்தில் மத்திய சுகாதாரத் துறை உதவுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார். பின்னர், மத்திய சுகாதாரத் துறை செயலரையும் சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, மாலை 4.25 மணி அளவில் அவர் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றார். மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், இருவரும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியைக் கோருவது குறித்து விவாதித்தனர். பின்னர், தம்பிதுரையின் அலுவலகத்திற்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். அங்கு மு. தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு பொன். ராதாகிருஷ்ணனும், விஜயபாஸ்கரும் ஜே.பி.நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
'விலக்கு கிடைக்க தீவிர முயற்சி'
'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்த விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முயற்சி செய்து வருகிறோம். மேலும், நிரந்தரத் தீர்வுக்காக தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்க மாநில அரசு போராடி வருகிறது என்றார் அவர்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியது: இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை திங்கள்கிழமை மட்டும் மூன்று முறைச் சந்தித்துப் பேசியுள்ளோம். மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங்கையும் சந்தித்துப் பேசினோம். நாடாளுமன்ற வளாகத்தில் சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்து இதுதொடர்பாக எடுத்துரைத்தேன். தமிழகத்தின் நிலையை பிரதமரும், மத்திய அமைச்சர்களும் முழுமையாக உணர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல்களைக் களைவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். தமிழக அரசின் 85 சதவீதம் இடஒதுக்கீடு அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com