மகா கூட்டணியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை

மகா கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை . ஏனெனில், அந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது ஊழலுடன் சமரசம் செய்து கொள்வது என்றே அர்த்தம்
மகா கூட்டணியிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை

மகா கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை . ஏனெனில், அந்தக் கூட்டணியில் தொடர்வது என்பது ஊழலுடன் சமரசம் செய்து கொள்வது என்றே அர்த்தம் என்று நிதீஷ்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. அவற்றுக்கு முறையான பதில்களை அளிக்குமாறு மட்டுமே நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதற்கு பதில் கூறாமல் 'நான் ஒரு சிபிஐ அதிகாரியா? அல்லது போலீஸ்காரரா?' என்று என்னைக் கிண்டல் செய்தனர்.
விளக்கம் அளிக்குமாறு அவர்களிடம் நான் எப்போதுமே கோரியதில்லை. மாறாக, ஊழல் புகார்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறுதான் கேட்டேன். ஆனால் லாலு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஊழலைச் சகித்துக் கொள்ள முடியாது என்று நான் கூறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நான் எப்படி மௌனமாக இருக்க முடியும்? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் உரிய பதில் இல்லை என்ற உணர்வே எனக்கு தற்போது ஏற்படுகிறது.
பிரதமர் மோடியுடன் போட்டியிடக் கூடிய வலிமை யாருக்கும் இல்லை. மோடிக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தெரிவித்தது. அத்தகைய ஒவ்வொரு விமர்சனத்தையும் மகா கூட்டணிக்காக பொறுத்துக் கொண்டேன். ஆனால், லாலு பிரசாத்துக்கு எதிராக எங்களது ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த யாரும் எதுவும் கூறவில்லை.
மதச்சார்பின்மை விவகாரத்தில் எனக்கு யாரிடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. மதச்சார்பின்மை என்றால் என்ன? கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளைக் குவிப்பது என்பதுதான் மதச்சார்பின்மைக்கு அர்த்தமா?
குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தியை ஐக்கிய ஜனதா தளம் ஆதரிக்கும். இது தொடர்பாக அவருக்கு நாங்கள் ஏற்கெனவே வாக்குறுதி அளித்து விட்டோம் என்றார் நிதீஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com