நாடாளுமன்ற இணைப்பு கட்டடத் திறப்பு விழாவுக்கு ஹமீது அன்சாரியை அழைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்ற இணைப்பு கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரி, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பு

நாடாளுமன்ற இணைப்பு கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஹமீது அன்சாரி, மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாததற்கு, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
நாடாளுமன்ற இணைப்பு புதிய கட்டடத் திறப்பு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு ஹமீது அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மாநிலங்களவை எம்.பி.க்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை, மாநிலங்களவையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜவாதி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர். இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவரும் குலாம் நபி ஆஸாத் பேசியதாவது:
நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து விழாக்களுக்கும், மாநிலங்களவை தலைவர், துணைத் தலைவர், மக்களவை தலைவர், துணைத் தலைவர், இரு அவை எம்.பி.க்களும் அழைக்கப்படுவர். நாடாளுமன்ற இணைப்பு கட்டட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா கடந்த 2009-ஆம் ஆண்டில் நடந்தபோது இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
அந்த கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் கிடையாது. ஆனால், மாநிலங்களவைத் தலைவரும், துணைத் தலைவரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது மாநிலங்களவையின் கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும்.
இந்த சம்பவம், மாநிலங்களவைக்கு நேரிட்ட மிகப்பெரிய அவமானம் ஆகும். மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு முயற்சிக்கக் கூடாது. மாநிலங்களவையை வேண்டாம் என்று மத்திய அரசு கருதுகிறதா? இதுகுறித்து அவையில் இருக்கும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதில் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், 'மாநிலங்களவை எம்.பி.க்கள் யாருக்கும் இந்த விழா குறித்து தெரியாது; நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து அலுவல்களுக்கும் இரு அவைகளுமே பொறுப்பு. ஆனால், நாடாளுமன்ற நிர்வாகம் தொடர்பான பணியை மக்களவைத் தலைவர் மட்டுமே செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக யார் முடிவெடுத்தார்கள் என்பது குறித்த ஆவணத்தை அளிக்க வேண்டும்' என்றார்.
சமாஜவாதி மூத்த உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசுகையில், 'மாநிலங்களவைத்தான் முதலில் ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகே, மக்களவை உருவாக்கப்பட்டது. அதேபோல், மக்களவைத் தலைவரோடு ஒப்பிடுகையில், மாநிலங்களவைத் தலைவர்தான் பதவியில் உயர்ந்தவர். அவர்தான் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருக்கிறார். இந்த விழாவுக்கு மாநிலங்களவையைச் சேர்ந்த யாரையும் அழைக்காதது கடும் கண்டனத்துக்குரியது ஆகும்' என்றார்.
திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், 'இதுதொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் குழுவில், மக்களவை எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்; ஆதலால், அந்த குழுவில் மாநிலங்களவை எம்.பி.க்களையும் சேர்க்க வேண்டும்' என்றார்.
இதையடுத்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கூறுகையில், 'மரியாதைக்குரிய மாநிலங்களவைத் தலைவர் அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுதொடர்பாக மக்களவைச் செயலருக்கு, மாநிலங்களவைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் மக்களவைத் தலைவர்தான் எடுக்கிறார். ஆனால், அவர்தான் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று எந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படவில்லை' என்றார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்கையில், 'நாடாளுமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பல்வேறு குழுக்களே கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் கவனித்து வருகின்றன' என்றார். நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், 'நாடாளுமன்ற இல்ல வளாகத்தை மக்களவை செயலகம்தான் கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் கவனித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசால் எந்த புதிய முடிவும் எடுக்கப்படவில்லை' என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட குலாம் நபி, 'இதுநாள் வரையிலும் மாநிலங்களவை புறக்கணிக்கப்பட்டதில்லை. இரு அவைகளின் தலைவர்களும் இல்லாமல், எந்த நாடாளுமன்ற விழாக்களும் நடத்தப்பட்டதில்லை. எனவே, அவையை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று நக்வியை கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com