மாநிலங்களவை புறக்கணிப்பு: பாஜக எம்.பி.க்களிடம் விளக்கம் கேட்கும் அமித் ஷா

மாநிலங்களவை அலுவல்களில் திங்கள்கிழமை கலந்து கொள்ளாமல் தவிர்த்தது குறித்து பாஜக எம்.பி.க்களிடம் எழுத்துப்பூர்வமாக
மாநிலங்களவை புறக்கணிப்பு: பாஜக எம்.பி.க்களிடம் விளக்கம் கேட்கும் அமித் ஷா

மாநிலங்களவை அலுவல்களில் திங்கள்கிழமை கலந்து கொள்ளாமல் தவிர்த்தது குறித்து பாஜக எம்.பி.க்களிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் வகையில், மத்திய அரசால் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 30 உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இது, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தில்லியில் பாஜகவின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பேசியதாவது:
நாடாளுமன்ற அலுவல்களில் கலந்து கொள்வது தொடர்பாக எப்போதெல்லாம், கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் உறுப்பினர்கள், நாடாளுமன்ற அலுவல்களில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லையெனில், அதை தீவிரமான பிரச்னையாகக் கட்சி எடுத்துக் கொள்ளும்.
அதேபோல், மாநிலங்களவை அலுவல்களில் உறுப்பினர்கள் திங்கள்கிழமை கலந்து கொள்ளாமல் இருந்த சம்பவம் போன்று, எதிர்காலத்தில் நடக்கக் கூடாது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நமது உறுப்பினர்கள் சிலரின் வாக்குகள் செல்லாததாகின. ஆதலால், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அத்தகைய தவறு நடைபெறாமல் இருப்பதை உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன ரீதியில் அந்தஸ்து அளிக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட மசோதா, பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். மக்களவையில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு விட்ட போதிலும், மாநிலங்களவைக்கு மசோதா வந்தபோது, நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும், பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, மசோதாவை தடுத்த நிறுத்த சதி செய்தது என்று அமித் ஷா கூறினார்.
பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தத் தகவலை அக்கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான அனந்த் குமார் தெரிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவை கூட்டத்தில் திங்கள்கிழமை கலந்து கொள்ளாத பாஜக எம்.பி.க்களிடம் அமித் ஷா, எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி கேட்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாம் வெள்ள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். இதனால், பாஜக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com