8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், நாடு முழுவதும் சர்வதேசத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து விவகாரம் குறிப்பிடத்தக்க ஒன்று.
அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது. அதாவது 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும் எனவும், அதுவும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்திய பிறகே அந்த வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
அதுதொடர்பான அம்சங்கள் அடங்கிய மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத் தவிர, நாடு முழுவதும் சர்வதேசத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com