பிரணாப் முகர்ஜி எனது வழிகாட்டி: பிரதமர் மோடி கடிதம்

'பிரணாப் அவர்களே! நீங்கள் எனக்கு தந்தையைப் போன்றவரும், வழிகாட்டியும் ஆவீர்கள்' என்று பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி எனது வழிகாட்டி: பிரதமர் மோடி கடிதம்

'பிரணாப் அவர்களே! நீங்கள் எனக்கு தந்தையைப் போன்றவரும், வழிகாட்டியும் ஆவீர்கள்' என்று பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 25-ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதற்கு முதல் நாள் (ஜூலை 24), அவருக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அது குறித்து பிரணாப் முகர்ஜி, டுவிட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் 'குடியரசுத் தலைவர் என்ற பதவியில் எனது கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வந்த ஒரு கடிதம் என் நெஞ்சைத் தொட்டது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் மோடி கூறியிருப்பதாவது:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியாள் போலவே தில்லிக்கு வந்தேன். எனக்கு முன்பு இருந்த பணியானது மிகப்பெரிதாகவும், சவால் நிரம்பியதாகவும் இருந்தது. அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு நீங்கள் ஒரு தந்தையைப் போலவும் வழிகாட்டியாகவும் இருந்தீர்கள். உங்களது ஞானம், வழிகாட்டுதல், தனிப்பட்ட அன்பு ஆகியவை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், பலத்தையும் கொடுத்தது.
தங்களின் கூரிய மதிநுட்பமானது எனக்கு தொடர்ந்து உதவிகரமாக இருந்தது. நீங்கள் என் மீது அன்பும், அக்கறையும் காட்டினீர்கள். பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் அல்லது பிரசார சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் முடியும் நேரத்தில் 'உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளவும்' என்று வலியுறுத்தும் உங்கள் ஒரு தொலைபேசி அழைப்பானது எனக்கு புத்துணர்ச்சி அளிக்கப் போதுமானதாக இருக்கும்.
நமது அரசியல் பயணங்கள் வேறுபட்ட அரசியல் கட்சிகளில் வடிவம் பெற்றன. நமது சித்தாந்தங்கள் வேறுபட்டவை. நமது அனுபவங்களும் மாறுபட்டவை. எனது நிர்வாக அனுபவமானது எனது மாநிலத்தில் (குஜராத்) இருந்து கிடைத்தது. நீங்களோ நீண்ட காலமாக தேசிய அரசியலையும், மத்திய அரசுப் பதவிகளையும் கவனித்து வந்துள்ளீர்கள்.
இருந்தபோதிலும், தங்களின் அறிவாற்றல், ஞானம் ஆகியவற்றின் பலம் காரணமாக நம்மால் இணைந்து பணியாற்ற முடிந்தது. குடியரசுத் தலைவர் மாளிகையை பல்வேறு திட்டங்களுக்கும் முன்முயற்சிகளுக்கும் தாங்கள் திறந்து விட்டீர்கள். அவை இந்திய இளைஞர்களின் புத்தாக்கம் மற்றும் திறமையை அங்கீகரிப்பவைûயாக அமைந்தன.
தாங்கள் பெற்றதை சமூகத்துக்கு சுயநலமின்றி திருப்பிக் கொடுப்பதற்கான வழியே அரசியல் என்று கருதிய அரசியல் தலைவர்களின் தலைமுறையைச் சேர்ந்தவர் நீங்கள்.
இந்திய மக்களுக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் சக்தியாகத் திகழ்கிறீர்கள். குடியரசுத் தலைவர் என்ற முறையில் ஒரு பணிவான மக்கள் சேவகர் மற்றும் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய உங்களை நினைத்து இந்தியா எப்போதும் பெருமிதம் கொள்ளும். உங்களின் அறிவுரைகள் எங்களைத் தொடர்ந்து வழிநடத்தும். உங்களுடன் பிரதமர் என்ற முறையில் பணியாற்றியது எனக்குக் கிடைத்த கௌரவமாகும் என்று அந்தக் கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் 'தங்களுடன் பணியாற்றியதை நான் எப்போதும் நினைவில் கொண்டிருப்பேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா பாராட்டு: இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவியை வகிப்பவர் மீது ஒரு பிரதமர் காட்ட வேண்டிய மரியாதைக்கு ஓர் உதாரணமாக பிரணாப் முகர்ஜிக்கு மோடி எழுதிய கடிதம் விளங்குவதாக பாஜக தலைவர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஹரியாணா மாநிலம் ரோத்தக் நகரில் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், அரசியல்சாசனப்படி உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியின் கௌரவம் காக்கப்பட வேண்டும் என்பதில் மோடி எப்போதும் நம்பிக்கை வைத்து வந்துள்ளார். அவரது கடிதமானது நாட்டின் அரசியலில் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com