வருமான வரி சோதனை எதிரொலி : குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பத் திட்டம்

கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவதையடுத்து, அவரது

கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவதையடுத்து, அவரது கண்காணிப்பில் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டிருந்த குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத்தில் காலியாகவுள்ள 3 இடங்களில் 1 மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைக் கைப்பற்ற வியூகம் வகுத்த காங்கிரஸ் மேலிடம், அம் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடக அமைச்சர் சிவக்குமாரின் கண்காணிப்பில் பெங்களூரில் தங்க வைத்திருந்தது.
குஜராத்தில் ஆக.8-ஆம் தேதி 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. பாஜக வேட்பாளர்களாக அக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த எம்எல்ஏ பல்வந்த்சின்ஹ் ராஜ்புத், காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகிய 4 பேரும் களத்தில் உள்ளனர்.
182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 125, காங்கிரஸுக்கு 57 இடங்கள் உள்ளன. ஒரு இடத்தில் வெற்றி பெற 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி, பாஜகவுக்கு இரண்டு வேட்பாளர்களுக்கான 96 வாக்குகள் பயன்படுத்தியது போக, கூடுதலாக 29 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் உள்ளன.
கூடுதலாக 18 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துவிட்டால், பாஜகவின் மூன்றாவது வேட்பாளர் பல்வந்த்ன்ஹ் ராஜ்புத்தும் வெற்றி பெறுவார். அகமது படேலின் வெற்றியைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ள பாஜக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களை பாஜகவில் இணைக்க முயற்சித்தது. இதில் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துவிட்டனர்.
இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 51 ஆக குறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய சங்கர்சிங் வகேலாவுக்கு ஆதரவாகவும் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், தங்களது கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவதைத் தடுக்க 44 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி மேலிடம் பெங்களூருக்கு அனுப்பிவைத்தது.
ஜுலை 29-ஆம் தேதி பெங்களூருக்கு வந்த குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரும் ராமநகரில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு எம்.எல்.ஏ.க்களைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு கர்நாடக மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், அவரது சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷிடம் வழங்கப்பட்டிருந்தது.
டி.கே.சிவக்குமார் தங்கியிருந்த ஈகிள்டன் கேளிக்கை விடுதிக்கே வந்திருந்த வருமான வரி அதிகாரிகள், அங்குள்ள அறைகளில் சோதனை நடத்தினர். இது குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடத்தும் கர்நாடகத்திலேயே அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினால், தங்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்று குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அச்சமடைந்துள்ளனர்.வருமான வரி சோதனைக்கு ஆளானால், நிகழாண்டின் டிசம்பரில் நடக்கவிருக்கும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காதோ என்ற அச்சமும் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசியல் லாபங்களுக்காக பெங்களூரில் தங்கியிருப்பது சம்பந்தப்பட்ட தொகுதி மக்களிடையே அதிருப்தியை எற்படுத்தியிருப்பது குஜராத் எம்எல்ஏக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என்று திட்டமிட்டுள்ளதா,க நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com