பரபரப்பான சூழ்நிலையில் குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

பரப்பான அரசியல் சூழ்நிலையில் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்
பரபரப்பான சூழ்நிலையில் குஜராத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது


குஜராத்: பரப்பான அரசியல் சூழ்நிலையில் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

இந்தத் தேர்தலில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ள பல்வந்த்சிங் ராஜ்புட் உள்ளிட்ட 3 பேரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேலும் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு காந்திநகரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தனர். மேலும் சிலரும் பாஜகவில் இணையலாம் என்று தகவல் வெளியானது.

இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 44 பேரை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு காங்கிரஸ் மேலிடம் கொண்டு சென்று தங்க வைத்தது.

பின்னர் அவர்கள் பெங்களூரில் இருந்து நேற்று குஜராத்துக்கு அழைத்து வரப்பட்டு, ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 44 பேரையும், அகமது படேல் சந்தித்துப் பேசினார்.

இந்தத் தேர்தல், குறிப்பிட்ட யாருடைய கௌரவம் சம்பந்தப்பட்டது கிடையாது. எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேருடன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஒருவரின் ஆதரவும் எனக்கு உள்ளது.

இவர்களைத் தவிர்த்து, இதுவரை தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக வாக்களிப்பர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலாவும் எனக்கு வாக்களிப்பேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, தேர்தலில் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.

காங்கிரசைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, குஜராத் சட்டப்பேரவையின் பலம் 176 ஆக குறைந்தது. அத்துடன் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் பலமும் 57ல் இருந்து 51 ஆக குறைந்தது.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, குஜராத் பேரவையின் தற்போதைய பலத்தின் படி 45 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். குஜராத் சட்டப்பேரவையில் பாஜகவிற்கு தற்போது 121 எம்எல்ஏக்கள் இருப்பதால், அக்கட்சியின் இரண்டு வேட்பாளர்கள் வெற்றி பெறுவதில் சிக்கல் இல்லை. மீதம் 31 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் பாஜகவின் 3வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 14 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் பாஜகவை பொறுத்தவரை அமித் ஷா மற்றும் ஸ்ம்ருதி இரானி ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே உள்ள நிலையில், 3வது வேட்பாளருக்கு பாஜகவிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில், காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வந்த பல்வந்த்சிங் ராஜ்புட் வேட்பாளராக ஏன் நிறுத்தப்பட்டார். காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு வந்த பல்வந்த்சிங் ராஜ்புட்டுக்கு காங்கிரஸில் உள்ள அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அவருக்கு வாக்களித்தால் மட்டுமே அவர் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 3வது வேட்பாளர் வெற்றி பெற கூடுதலாக 14 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு வெற்றிக்கு தேவையான வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக 3 வாக்குகள் கிடைக்கும். இதனால், பாஜக வேட்பாளர்கள் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். எங்களது கணக்கு எப்போதும் தவறாது என்று அக்கட்சியின் மாநில மேலிடப் பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைக்கு அகமது படேல் தேர்வு செய்யப்பட வேண்டுமெனில், அவருக்கு ஆதரவாக 45 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்கு கட்சியின் எம்எல்ஏக்கள் 44 பேருடன் மேலும் ஒருவரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கப் போவதாக கூறியிருக்கிறார். இதனால், மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com