குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்படாமல் போயிருந்தால்... வெங்கையா பேச்சு

குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்யப்படாமல் இருந்திருந்தால் 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பேன் என்று வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்படாமல் போயிருந்தால்... வெங்கையா பேச்சு

ஹைதராபாத்: குடியரசுத் துணைத்தலைவராக தேர்வு செய்யப்படாமல் இருந்திருந்தால் 2019ம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பேன் என்று வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திலும், அரசியல் பொதுக் கூட்டங்களிலும் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கைய நாயுடு பேசிய பேச்சுகள் அடங்கிய புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு ஹைதராபாத்தில் இன்று வெளியிடப்பட்டது.

அப்போது உணர்ச்சிப் பெருக்கோடு பேசிய வெங்கைய நாயுடு, நான் எனது மனைவியிடம் எப்போதோ சொல்லிவிட்டேன், 2019ம் ஆண்டு அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என்று. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன். அப்போது எனக்கும் 70 வயதாகியிருக்கும். எனவே, கொள்கை ரீதியாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சரியான நேரமாக இருக்கும் என்று கூறியிருந்தேன்.

ஆனால் பாருங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நான் திட்டமிட்டதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்றார் வெங்கைய நாயுடு.

குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பாதுகாப்புக் காரணங்களால் முன்பு போல பொதுமக்களுடன் நெருங்கிப் பழக முடியாது. ஆனால் அதற்காக சிறை வாழ்க்கை என்று அதை செல்ல முடியாது. 

அதில்லாமல், ஏற்கனவே நான் சிறை வாழ்க்கையை அனுபவித்தவன் தான். அதற்கு ராணுவ ஆட்சிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். என் வருங்காலத்தை நினைத்து நான் கவலைப்படப்போவதில்லை, அதனை அனுபவிக்கப் போகிறேன், ஒரு சில எல்லைகளும், தடைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நிச்சயம் மக்களுடன் மக்களாக வாழ்வதற்கான ஒரு சிறந்த வழியை கண்டுபிடித்து விடுவேன். இனிமேல் நான் அரசியல் பற்றி பேசக் கூடாது. ஆனால், மக்களைப் பற்றியும், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விஷயங்கள் பற்றியும் பேசுவேன் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com