நீர் சேகரிப்பில் தமிழகம் கவனம் செலுத்தாதது ஏன்? உச்சநீதி மன்றம் சரமாரி கேள்வி!

நீருக்காக பிற மாநிலங்களுடன் போராட வேண்டிய நிலையில் உள்ள தமிழகம், நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீர் சேகரிப்பில் தமிழகம் கவனம் செலுத்தாதது ஏன்? உச்சநீதி மன்றம் சரமாரி கேள்வி!

புதுதில்லி: நீருக்காக பிற மாநிலங்களுடன் போராட வேண்டிய நிலையில் உள்ள தமிழகம், நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன் என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த மனுக்களை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு முன் ஒவ்வொரு மாநிலங்களும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகிறது

சிறிய இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். அப்பொழுது அவர் கர்நாடகம் தவறான சாகுபடி முறைகளை பின்பற்றுகிறது என்றும், இதன் காரணமாக அளவுக்கு அதிகமான காவிரி நீர் வீணாகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களாவன:

தமிழகத்தினை பொறுத்தவரை நீர் தேவைக்காக அண்டை மாநிலங்களுடன் பிரச்னையில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அத்துடன் தற்பொழுது மாநிலம் முழுவதும் பரவலாக குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம், நீர் சேகரிப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?

மேட்டூர் அணை போன்ற பெரிய நீர் தேக்கங்கள் இருக்கும் பொழுது, அதில் அதிக அளவில் நீர் தேக்கி வைக்க முயற்சிகள் எடுக்காமல் இருப்பது எதனால்?

இவ்வாறு நீர் சேகரித்து வைக்கப்பட்டால்,கர்நாடகமே நீர் தராத போதிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரை ஆபத்து காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் நிலத்தடி நீர் சேகரிப்பு விபரங்கள் பற்றியும் நீதிபதிகள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com