மதங்களின் பெயரால் பிரிவினையைத் தூண்டக் கூடாது: ஓய்வு பெறும் யெச்சூரி பேச்சு

மதங்களின் பெயரால் பிரிவினையைத் தூண்டக் கூடாது' என்று மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மதங்களின் பெயரால் பிரிவினையைத் தூண்டக் கூடாது: ஓய்வு பெறும் யெச்சூரி பேச்சு

மதங்களின் பெயரால் பிரிவினையைத் தூண்டக் கூடாது' என்று மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
மாநிலங்களவை எம்.பி.க்கள் 10 பேரின் பதவிக் காலம், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடையும் நாளான வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. அவர்களில் 6 பேர் மீண்டும் அவைக்கு தேர்வாகியுள்ள நிலையில், சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.பாண்டியா (பாஜக), டி.பந்தியோபாத்யாயா (திரிணமூல் காங்கிரஸ்) ஆகிய 3 உறுப்பினர்களுக்கு வியாழக்கிழமை பிரியாவிடை அளிக்கப்பட்டது. அப்போது, நா தழுதழுக்க சீதாராம் யெச்சூரி உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். அவர், பேசியதாவது:
நாட்டின் பல்வேறு சமூகத்தினரிடையே பிணைப்பை வலுப்படுத்தினால்தான், ஒட்டுமொத்த நாட்டையும் வலுப்படுத்த முடியும். நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நிலவுகிறது. பன்முகத் தன்மையின் மீது ஒருமுகத் தன்மையை திணிக்க முயன்றால், நாடு ஒருபோதும் ஒன்றுபடாது. பிளவுபடவே செய்யும். நாட்டின் சமூக நல்லிணக்கத்தில் நாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
குறுகிய மனப்பான்மையால், எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைக்கக் கூடாது. ஜாதி, மதங்களின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.
நான் மெட்ராஸில் தெலுங்கு பேசும் பிராமண குடும்பத்தில் பிறந்தவன். இஸ்லாமிய கலாசாரம் நிறைந்த ஹைதராபாதில் பள்ளிப் படிப்பு பயின்றேன். எனது மனைவியின் தந்தை, இஸ்லாமிய மதகுரு ஒருவரின் மகனாவார். இப்போது, எனது மகன் ஹிந்துவா? முஸ்லிமா? இந்தியன் என்பதை தவிர அவனுக்கு வேறெந்த அடையாளமும் இல்லை. இதுதான் இந்தியா என்றார் யெச்சூரி.
முன்னதாக, சீதாராம் யெச்சூரி குறித்து, மாநிலங்களவையில் அவரது இருக்கைக்கு அருகில் அமரும் சமாஜவாதி உறுப்பினர் ராம்கோபால் யாதவ் பேசினார். அப்போது, 'யெச்சூரி, உங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்' என்று கண்ணீர் மல்க அவர் கூறினார். யெச்சூரியும் ராம்கோபால் யாதவ் குறித்து பேசும்போது உணர்வுப்பூர்வமாக கண்ணீர் மல்க பேசினார்.
மேலும், நாடாளுமன்றவாதியாக யெச்சூரி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து, அவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, முக்தார் அப்பாஸ் நக்வி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, திமுக உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com